காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம், தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டது.15.30 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக வெற்றிக்கழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இதற்கு காமராஜர் காலை உணவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.திட்டம் விரிவாக்கம் வாயிலாக, தமிழகம் முழுதும் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இந்த விரிவாக்க திட்டத்திற்கு, நடப்பு நிதியாண்டில் 217 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் வாயிலாக, மாநிலம் முழுதும் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 34.6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.அறிவுரை விரிவாக்க திட்டத்தை, சென்னை திருவான்மியூர், காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில், முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.பள்ளிக் குழந்தைகளுக்கு தன் கையால், பொங்கல், சாம்பார், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை முதல்வர் பரிமாறினார். இதற்காக, முதல்வருக்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.பின், 60 பள்ளிக் குழந்தைகளுடன், முதல்வர் அமர்ந்து சாப்பிட்டார். வகுப்பறைகளில் அமர்ந்து சாப்பிட்ட குழந்தைகளிடம் பேசிய முதல்வர், 'அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்' என, அறிவுரை கூறினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, குமார், தலைமைச் செயலர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சமூகநலத்துறை செயலர் பல்லவி பல்தேவ், பள்ளிக் கல்வித்துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.