📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 19, 2026 12:33 AM

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செப்.22

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செப்.22

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செப்.22-ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

பள்ளிகளில் விதவிதமான சுவையான காலை உணவுகளை வழங்குவதற்காக சமையல் நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Published : September 18, 2026 at 10:37 PM IST

சென்னை: காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் செப்.22- ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (செப்.18) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் முனைவர்.சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் பல்லவி பல்தேவ், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

காலை தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.

சமையல் கூடங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

ரூபாய் 724 கோடி ஒதுக்கீடு

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 38 மாவட்டங்களிலும் திட்டம் விரிவாக்கம்

ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணாக்கர்களுக்கு காலை உணவுக் கிடைப்பதன் மூலமாக கல்வி வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வெற்றி நடை போடப்போகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. காலை உணவுகளைத் தடையின்றி தரமாக வழங்கும் வகையில் பல்துறைகள் மூலமாக உணவை எங்கு தயாரிப்பது, எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு உணவுகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு போவது, காலை உணவு சமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருட்கள், உள்ளிட்ட தேவைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிலங்களை நாம் தருவது இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்றும் இருமொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. காலை உணவுத் திட்டத்தை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மெனு என்ற அடிப்படையில் பொங்கல், கிச்சடி உள்ளிட்ட பல வகை உணவுகளைத் தயாரித்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய உணவு வகைகள்

புதிய உணவு வகைகளைக் கொண்டு வருவதற்காக சமையல் நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் தொடங்கிய ஒரு சில நாட்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விதவிதமான சுவையான காலை உணவுகள் வழங்கப்படும். சிறையில் இருக்கும் சிறைவாசிகள் கூட சிக்கன் பிரியாணி சாப்பிடும் பொழுது பள்ளி குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடக்கூடாதா என்ற ஆசையும், எண்ணமும் முதலமைச்சருக்கு உண்டு.

பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கப்படுமா?

சிக்கன் பிரியாணி உடனடியாக வழங்க முடியாது. இனிவரும் காலங்களில் இதனை பரிசோதனை முறையில் செயல்படுத்திய பிறகு, காலை உணவில் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தக்கூடாது. காலை உணவுத் திட்டத்தின் கீழ் தட்டு உள்ளிட்ட உபகரணங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எவ்வளவு சென்றுள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளோம். செப்.22- ஆம் தேதிக்குள் தேவையான உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைந்து விடும்" என்றார்.