📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 07:33 PM

காங்கிரஸ் கொண்டுவந்த நீட் தேர்வில் மட்டும் பாஜக அக்கறை காட்டுவது ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

காங்கிரஸ் கொண்டுவந்த நீட் தேர்வில் மட்டும் பாஜக அக்கறை காட்டுவது ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

காங்கிரஸ் கொண்டுவந்த நீட் தேர்வில் மட்டும் பாஜக அக்கறை காட்டுவது ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் ஏற்க மறுக்கும் மத்திய அரசு, நீட் விவகாரத்தில் மட்டும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

Published : July 28, 2026 at 6:16 PM IST

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டங்களை எதிர்க்கும் பாஜக அரசு, நீட் தேர்வு விவகாரத்தில் மட்டும் ஆதரிப்பது ஏன்? என திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், 'பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுத்தல் 2024' இல் பல்வேறு திருத்தங்கள் செய்து, மத்திய பாஜக அரசு நேற்று நாடாளுமன்றத்தில் 'புதிய திருத்த மசோதா 2026'-ஐ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மசோதா தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது.

மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்திய இந்த மசோதா மீதான விவாதம் இன்று மக்களைவையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி. தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார்.

'குளறுபடியை தடுப்பதற்கு பதிலாக தண்டனையா?'

அப்போது அவர், "வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு புதிய திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது எந்த விதத்திலும் மாணவர்களுக்கு பயன் தராது. பல்வேறு தேர்வுகளின் நோக்கமே தவறாக இருக்கும்போது, அதில் கவனம் செலுத்தாமல் முறைகேடு செய்பவர்களுக்கு தண்டனை என்பது இந்த விவகாரத்தை திசை திருப்புவதை போல உள்ளது. தற்கொலையை தடுக்க மின்விசிறியில் ஸ்பிரிங் பொருத்துவதை போல, தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டறியாமல், முறைகேடுகளுக்கு நாங்கள் தண்டனை விதிக்க உள்ளோம் என்று கூறுவது மிகத்தவறான நடைமுறையாகும்.

'நீட் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரானது'

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டே வினாத்தாள் கசிவு நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை வினாத்தாள் கசிவு என்பது தொடர்கதையாகி வருகிறது. நீட் தேர்வு ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரானது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு அழுத்தம் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கையை மத்திய அரசு செவிமடுத்து கேட்க மறுக்கிறது.

'நீட் தேர்வால் வந்த மாற்றம் என்ன?'

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் மருத்துவ துறையில் வந்த மாற்றம் என்ன? மிகச்சிறந்த மருத்துவர்கள் தற்போதுதான் நாட்டிற்கு கிடைத்துள்ளார்களா? இந்த தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவம் படித்தவர்களிடம் தான் இன்று குடியரசுத் தலைவர் முதல் சாதாரண பாமரன் வரை மருத்துவம் பார்த்து வருகிறார்கள். அவர்களை விட சிறந்த மருத்துவர்கள் நாட்டில் இருக்கிறார்களா?

நாட்டில் மருத்துவ வசதி குறைவாக உள்ளது, புதிய மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன. மத்திய அரசு அதில் அக்கறை காட்டினால் நாங்கள் பாராட்டுவோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் இன்றளவும் காலதாமதம் நிலவுகிறது. அதை சரிசெய்ய வேண்டும் என திமுக சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

'எங்களிடம் திணிப்பு எடுபடாது'

நாங்கள் இந்திய மக்கள்தான், அதை மனதார பெருமையாக நினைக்கிறோம். ஆனால், உங்கள் எண்ணங்களை எங்களிடம் திணிக்க நினைக்காதீர்கள். அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இந்த புதிய மசோதா நீட் முறைகேடுகளுக்கு முழுமையான தீர்வு இல்லை. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் நிலைபாடு. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் ஏற்க மறுக்கும் மத்திய அரசு, நீட் விவகாரத்தில் மட்டும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

'நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு இப்படியொரு விளக்கமா?'

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் வினாத்தாள் லீக் காரணமாக தங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதைப்பயன்படுத்தி அதிக மதிப்பெண் தங்களால் எடுக்க முடிந்ததாகவும் மாணவர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பதில் மூலம், பாஜக அரசு வினாத்தாள் கசிவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளதோ? என்ற சந்தேகம் வருகிறது" என்று தயாநிதி மாறன் பேசினார்.