📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 04:04 PM

காதலனுக்கு பைக் வாங்கி தர தோழியின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி

காதலனுக்கு பைக் வாங்கி தர தோழியின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி

காதலனுக்கு பைக் வாங்கி தர தோழியின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி

மாணவியை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Published : September 4, 2026 at 8:54 PM IST

கோயம்புத்தூர்: காதலனுக்கு பைக் வாங்கி தருவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் அவரின் தோழியின் வீட்டில் 9 சவரன் தங்க நகையை திருடி கைவரிசையை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி தனது தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது யாரும் கவனிக்காத நேரத்தில், தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதிலிருந்து ஒன்பது சவரன் தங்க நகைகளை அவர் திருடியதாக தெரிகிறது. இதையறியாத குடும்பத்தினர் சமீபத்தில் பீரோவை திறந்து பார்த்தபோது குறிப்பிட்ட 9 சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதைக் கண்டு அதிர்ந்துபோன அவர்கள் உடனடியாக தமிழ்செல்வன் (59) என்பவரின் உதவியுடன் கடந்த புதன் கிழமை (செப்டம்பர் 2) கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்லூரி மாணவி மீது சந்தேகம் அடைந்து, அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில், அந்த 9 பவுன் தங்க நகையை திருடியதை கல்லூரி மாணவி ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருடிய அந்த நகையை பொள்ளாச்சியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால், அவர் யாருடைய உதவியின் வாயிலாக இந்த நகையை விற்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில், அந்த கல்லூரி மாணவி, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த அவரின் காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருவதற்காக நகையை திருடினார் என்பதும் போலீசாரின் விசாரணை வாயிலாக தெரிய வந்துள்ளது.

இதுதவிர, காதலனுக்கு பைக் வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யும் வீடியோவையும், அந்த இளம்பெண் ரீல்ஸாக எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், மாணவியின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து, அவரை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - எண் 2 இல் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கோவை பெண்கள் சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.

இதற்கிடையே, நகையை திருடி விற்று வந்த பணத்தில் மாணவி அவரது காதலனுக்கு வாங்கி கொடுத்த இரண்டுசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "தோழி வீட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி, யாரும் பார்க்க நேரத்தில் பெட்ரூமுக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோவை திறந்து 9 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார். பின்பு எதுவும் நடக்காதது போல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், வீட்டில் இருந்தவர்கள் எதார்த்தமாக பீரோவை திறந்து பார்த்தபோது, தாங்கள் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியரின் பெற்றோர்கள், உறவினர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் அளித்தனர். தமிழ்ச்செல்வன் கிழக்கு காவல் நிலையத்தில் நகை திருட்டு குறித்து புகார் அளித்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வீட்டுக்கு வந்து போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கடந்த 16ஆம் தேதி மாணவியின் தோழி வீட்டுக்கு வந்துபோனது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தர நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்" என தெரிவித்தனர்.

மேலும், திருடுபோன நகைகளை மீட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காதலனுக்கு பைக் வாங்க தோழியின் வீட்டிலேயே கல்லூரி மாணவி நகையை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தனது காதலனுக்கு பைக் வாங்கி தரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் மாணவி பதிவிட்டிருந்த நிலையில், தற்போது அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.