காவிரி நீர்: ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
பெங்களூரு: தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
டெல்லியில் நடைபெற்ற ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட இயலாது என கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை எனத் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங் வேண்டிய நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது.
ஆனால் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், கர்நாடகாவில் நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அம்மாநில அணைகளில் 50 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.
மேலும், பெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது என்றும் இத்தகைய சூழலில் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட இயலாது என்றும் கர்நாடகா கைவிரித்தது.
எனினும், கர்நாடகாவின் வாதத்தை ஒழுங்காற்றுக் குழு ஏற்க மறுத்துவிட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும். மழைப் பற்றாக்குறை காரணமாக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவுக்கு ஏற்ப நீரைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அக்குழு அறிவுறுத்தியது.
“கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு நாள்தோறும் 3,500 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும். இதனை ஜூலை 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்,” என ஒழுக்காற்றுக் குழு தனது உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவு கர்நாடக அரசுத் தரப்புக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகத் தெரிகிறது.
அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மழை பெய்யாததால் கர்நாடகாவில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டுக்கு நீரைத் திறந்துவிட இயலாது என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்துக் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.