காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடகா அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஆனால், கர்நாடகா மறுத்து வருகிறது.
எனவே, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான உரிய நீரை திறந்து விட வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அதில், கர்நாடகா அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மற்ற சமயங்களில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டை கொடுக்க கர்நாடகா மறுக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு 4 முறை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை கடைபிடிக்க கர்நாடகா மறுத்து வருகிறது. 2026-27 பாசன ஆண்டில் விகிதாசார பங்கீட்டின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை கடைபிடிக்க மறுக்கும் கர்நாடகா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகளும், டில்லியில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.