காவிரி நீர்ப்பங்கீடு: நீருக்கான நியாயத்தின் திசை வழி
காவிரி நீர்ப்பங்கீடு: நீருக்கான நியாயத்தின் திசை வழி
இந்திய நாகரிகத்தின் வரலாறு ஆற்றுப்படுகைகளில் தோன்றியது. சிந்து, கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி—இவை வெறும் ஆறுகள் அல்ல; மனித வாழ்வையும், பண்பாட்டையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் வடிவமைத்த நாகரிகத்தின் குறியீடுகள்.
கால ஓட்டத்தில் காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு, தமிழ்நாடு-கர்நாடகம் ஆகிய இரு மாநில ஊடகங்களின் தலைப்புகளாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், நீருக்கான நியாயம் என்பது நீதிமன்றத் தீர்ப்புகளால் மட்டும் சாத்தியமில்லை. அதையும் தாண்டி நீருக்கான நியாயத்தின் திசை வழியைத் தேடுகிறது.
அரசமைப்பு நல்லிணக்கத்திற்காக
இந்திய அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தில் அதிகாரப்பகிர்வு என்பதே அடிப்படை. மாநிலப் பட்டியலில் நீருக்கான உரிமை இடம்பெற்றிருந்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளைப் பற்றிய பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் பங்கையும் அரசமைப்பு ஏற்றுக் கொள்ளுகிறது. அரசமைப்பின் பிரிவு 262, மாநிலங்களுக்கிடையேயான ஆற்று நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சட்டங்களும் தீர்ப்பாயங்களும் பல தசாப்தங்களாக நிலையான முடிவை எட்ட முடியாமல் செயற்பட்டு வருகின்றன.
அதேபோல், அரசமைப்பின் பிரிவு 21-இன் கீழ் வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக நீருக்கான உரிமையை இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன. பிரிவு 48A சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை அரசின் கடமையாகக் கூறுகிறது; பிரிவு 51A(g) இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என நினைவூட்டுகிறது.
இவற்றின் பொருள் தெளிவானது. இந்திய அரசமைப்பு நீரை வெறும் நிர்வாக மேலாண்மையாக அல்ல; சமூக நீதி, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கான பொறுப்புக் கூறலாகப் பார்க்கிறது.
காவிரி பிரச்சினை சொல்லும் செய்தி
காவிரி நீர்ப் பிரச்சினை என்பது இந்திய கூட்டாட்சியின் மிக நீண்ட தீர்க்கப்பெறாத சட்டப் பயணங்களில் ஒன்று. தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. பல இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பின்னர் உச்சநீதிமன்றமும் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நிர்வாக அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் தீர்வு சுமுகமாக எட்டப்பெறவில்லை.
ஒரு ஆண்டில் போதுமான மழை பெய்தால் தீர்ப்பு எளிதாகிறது. போதுமான மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டால் அதே தீர்ப்பு புதிய முரண்பாடுகளை உருவாக்குகிறது. இது நீர்ப் பிரச்சினையை அந்தக் கால நிலையான கணக்கீடுகளால் தீர்க்க முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது.
காலத்தின் கட்டாயமாய்ச் சுற்றுச்சூழல் கூட்டாட்சி
இருபதாம் நூற்றாண்டின் கூட்டாட்சி, மாநில அரசியல் எல்லைகளை மையமாகக் கொண்டிருந்தது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கூட்டாட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஒரு மாநிலத்தின் காடுகள் மற்றொரு மாநிலத்தில் ஆறு உற்பத்தியாவதை உயிர்ப்பிக்கின்றன. ஒரு மாநிலத்தின் ஈரநிலங்கள் இன்னொரு மாநிலத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கின்றன.
ஒரு மாநிலத்தின் மணல் கொள்ளை கீழ்நிலைப் பகுதிகளில் வாழும் மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. எனவே மாநிலங்கள் நீரைப் பகிர்ந்துகொள்வதற்கு முன், நீரை உருவாக்கும் இயற்கை அமைப்புகளைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் கூட்டாட்சியின் மையக் கொள்கையாக மாற வேண்டும்.
காலநிலை மாற்றம்: சட்டத்தில் இல்லாதது
காலநிலை மாற்றம் இன்று நீரியல் அறிவியலையே மாற்றியுள்ளது. முன்பு கணிக்கக்கூடிய பருவமழை, இன்று கணிக்க முடியாத பெருமழையாக மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை சில வாரங்களில் கொட்டித் தீர்க்கிறது. சில ஆண்டுகளில் பருவமழையே பொய்க்கிறது.
இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும், நீர்ப் பகிர்வு ஒப்பந்தங்கள் பழைய மழைத் தரவுகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. எனவே எதிர்கால நீர் நிர்வாகம் நிலையான ஒப்பந்தங்களாக அல்லாமல் மாறும் காலநிலைக்கு ஏற்ப தன்னைத் தகவமைக்கும் ஒப்பந்தங்களாக இருக்க வேண்டும்.
உலகம் காட்டும் வழி
உலகின் பல முக்கிய ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளால் பகிர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
டான்யூப் ஆறு ஜெர்மனியில் உற்பத்தியாகி ஆஸ்திரியா, ஹங்கேரி, குரோசியா, செர்பியா, பல்கேரியா, உக்ரைன் உள்ளிட்ட பத்து நாடுகளின் வழியாகப் பாய்கிறது.
மெகாங் ஆறு திபெத்தில் உற்பத்தியாகி சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் வழியாகவும்,
ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரியிலும், எத்தியோப்பியாவில் உள்ள தானா ஏரியிலும் உற்பத்தியாகும் நைல் ஆறு, சூடான், எகிப்து, கென்யா, தான்சானியா, ருவாண்டா, எரித்ரியா ஆகிய நாடுகளின் வழியாகவும்,
கினியா நாட்டில் உற்பத்தியாகும் செனகல் ஆறு மாலி, மொரிட்டானியா, செனகல் வழியாகவும்,
திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து ஆறு இந்தியா, பாகிஸ்தான் வழியாகவும் பாய்கிறது.
இதன் மூலம் பன்னாட்டு ஆறுகளின் நிர்வாகத்தில் ஒரு பொதுவான சிந்தனை காணப்படுவதை அறிய முடிகிறது:
நியாயமான, சமமான பயன்பாடு.
மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பயன்பாடு.
தரவுகளை வெளிப்படையாகப் பகிர்தல்.
கூட்டு அறிவியல் ஆய்வுகள்.
ஆறுகளுக்கென நிரந்தர ஆணையங்கள்.
பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே ஆக்கப்பூர்வ உரையாடல்.
இவை யாவும் இந்தியாவுக்கும் அப்படியே பொருந்துகின்றன என்பது வெளிப்படை.
சட்டம் மட்டும் போதாது
சட்டம் அவசியம். நீதிமன்றங்கள் அவசியம். தீர்ப்பாயங்கள் அவசியம். ஆனால் அவை மட்டும் போதுமானவை அல்ல.
ஆறு என்பது சட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு அல்ல; இயற்கையின் சுழற்சியில் இயங்கும் உயிரியல் அமைப்பு. அதனால், அறிவியல், சுற்றுச்சூழல், சட்டம், நிர்வாகம், நீரின் இருப்பு, பயன்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றிணையும்போது மட்டுமே நீருக்கான நீதி முழுமை பெறும்.
மாற்றத்திற்கேற்ப நீர் மேலாண்மை
கீழ்க்காணும் நீர் கொள்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டியது காலத்தின் அவசியம்:
ஒவ்வொரு ஆற்றுப் படுகைக்கும் ஒருங்கிணைந்த நிர்வாகம்.
பருவகால மழை, நீர்வரத்து தரவுகளை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ளுதல்.
நீர்ப்பிடிப்பு காடுகளைச் சட்டரீதியாகப் பாதுகாத்தல்.
ஏரிகள், குளங்கள், ஈரநிலங்களை மீட்டெடுத்தல்.
நிலத்தடி நீர் பயன்பாட்டை அறிவியல் அடிப்படையில் ஒழுங்குபடுத்துதல்.
குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் விவசாய முறைகளை ஊக்குவித்தல்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் காலநிலைத் தரவுகளின் அடிப்படையில் நீர்ப் பகிர்வு நடைமுறைகளை மறுஆய்வு செய்தல்.
நியாயமான நீர்ப் பகிர்வு
இந்தியாவில் ஓடும் "ஆறுகளின் நீரைப் பகிர்வது எப்படி?" என்ற கேள்வியிலிருந்து "இருக்கின்ற நீரை எவ்வாறு பாதுகாத்துப் பிரச்சினையின்றிப் பகிர்வது?" என்ற அடுத்த கட்டக் கேள்விக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீருக்கான நீதி என்பது தமிழ்நாட்டின் வெற்றியோ, கர்நாடகத்தின் வெற்றியோ அல்ல. அது இந்திய கூட்டாட்சியின் வெற்றி. அது சுற்றுச்சூழலின் வெற்றி. அது விவசாயிகளின் வெற்றி. அது வருங்கால தலைமுறையின் வெற்றி என்றே கருதப்பெறல் அவசியம்.
ஆறுகள் எல்லைகளை அறியாது ஓடுகின்றன; மனிதர்கள்தான் எல்லைகளை உருவாக்கினர். எனவே, நீருக்கான நியாயம் என்பது சட்ட நூல்களில் எழுதப்படும் தீர்ப்புகளால் மட்டும் உருவாகாது. அது காடுகளைப் பாதுகாக்கும் அரசியல் கொள்கைகளிலும், அறிவியலை மதிக்கும் நிர்வாகத்திலும், அரசமைப்பின் கூட்டாட்சி முறையிலும், காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பொது மனப்பான்மையிலும் உருவாக வேண்டும்.
சட்டம் பாதையைக் காட்டும். அறிவியல் திசையைக் காட்டும். கூட்டாட்சியின் ஒற்றுமையும் மாநிலங்களின் ஒத்துழைப்பும் மட்டுமே தீர்வை எட்டும். அன்றுதான் நீருக்கான நியாயம் என்பது நீதிமன்றத் தீர்ப்பின் தலைப்பாக அல்லாமல் நாகரிகத்தின் புதிய திசை வழியாக மாறும்.
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.