காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
பெங்களூரு: காவிரி நதிநீர்ப் பங்கீடு, மேகதாது அணைக் கட்டுமான விவகாரங்களை முன்வைத்துக் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு கர்நாடகாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவிதப் பாதிப்புமின்றி வழக்கம்போல் இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
முக்கியச் சேவைத் துறைகளின் ஆதரவின்மையால் போராட்டம் தோல்வி கண்டதாக ஒருதரப்பினர் தெரிவித்தனர்.
கன்னடக் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொதுப் போக்குவரத்து அமைப்புகள், உணவக அதிபர்கள் சங்கம், வர்த்தக அமைப்புகள் இதில் பங்கேற்க மறுத்து ஒதுங்கிக்கொண்டன.
இதன் காரணமாக, அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் வழக்கம்போல் இயங்கின. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி மக்களுக்குக் கிடைத்தன.
போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த பல கன்னட அமைப்புகள், கடைசி நேரத்தில் ஆதரவைத் திரும்பப் பெற்றதே போராட்டம் வெற்றிபெறாமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, முழு அடைப்புக்கான அழைப்பை திரும்பப் பெறுவதாக அவர்கள் அறிவித்தனர்.
காவிரியின் முக்கியப் பாசனப் பகுதியான மாண்டியா மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் தீவிர சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களில் இயல்புநிலை நீடித்தபோதிலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுப் பல இடங்களில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர்.