📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 04, 2026 02:01 PM

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னை / புதுடெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படியும் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறப்பதை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

நடப்பாண்டு ஜூலை மாதம் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை கர்நாடகம் திறக்காத நிலையில், இது தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு முறையிட்டது.

இதையடுத்து 15 நாள்களுக்கு தினந்தோறும் விநாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டம் ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது.

அப்போது கர்நாடக தரப்பில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் ஜூன் 1 முதல் ஜூலை 29 வரை கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளுக்கு 38.736 டிஎம்சி மட்டுமே நீர் வந்துள்ளது.

இது சுமார் 65 சதவீதம் குறைவாகும். எனவே காவிரியில் விநாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு திறக்க வேண்டும் என்ற பரிந்துரையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது தமிழகம் தரப்பில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஏற்கெனவே மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்க பரிந்துரைத்துள்ளதாகவும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் கர்நாடகா ஏற்கெனவே குறைவாகவே தண்ணீர் திறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இரு தரப்பின் கருத்துகளை கேட்ட பின்பு, தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு காவிரியில் உரிய அளவு தண்ணீரை திறந்து விடவில்லை. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், காவிரியில் 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜூலை 30-ம் தேதி உத்தரவிட்டிருந்த நிலையில் கர்நாடகம் அந்த உத்தரவை செயல்படுத்த வில்லை.

பில்லிகுண்டுலுவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை விநாடிக்கு 158 முதல் 550 கன அடி வீதமே தண்ணீர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.அதேநேரம் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹரங்கி, ஹேமாவதி அணைகளில் தற்போதைய நிலவரப்படி 77.537 டிஎம்சி நீர் உள்ளது.

குறிப்பாக தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீர் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் 2.915 டிஎம்சி தண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது, அதுபோல ஜூலை மாதம் 31.24 டிஎம்சிக்கு பதிலாக 0.698 டிஎம்சி தண்ணீரே திறந்துள்ளது.

விவசாய சாகுபடிக்கு மிக முக்கியமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நீர் திறக்க கர்நாடகா மறுத்தால் காவிரி டெல்டா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ல் காவிரிநீர் விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவு ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அந்தவகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின் படி 4.536 டிஎம்சி நீரை 12-ம் தேதிக்கு முன்னர் தமிழகத்துக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் 26.954 டிஎம்சி நீர் பாக்கியை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் மேலும், நிர்ணயிக்கப்பட்ட நீர் வெளியேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா அணைகளின் நீர்வரத்தை 10 நாள்களுக்கு ஒருமுறை கண்காணித்து, கர்நாடகாவுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது