கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு; ஒரே நாளில் ஒன்பது பேர் பலியான சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி ஒரே நாளில் ஒன்பது பேர் இறந்தனர்.
கேரளாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மழை மேலும் வலுத்ததால் ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் எதிர்பாராத விதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் மட்டும் ஒன்பது பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டம் டி.கே.காலனியில் உள்ள சூழல் சுற்றுலா மையமான கொட்டப்புழாவில் உள்ள ஆற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். மழை வலுத்ததை தொடர்ந்து அவர்களை அப்பகுதி மக்கள் கரைக்கு வரும்படி அழைத்தனர். பலரும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வெள்ளத்தின் அளவு அதிகரித்து சிலரை தண்ணீர் இழுத்து சென்றது. மீட்பு படையினர் சஜிதா 26, என்ற இளம் பெண், சஜாத் 30, ரஹீம் 32, ரபீக் 29, மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்பட ஐந்து பேரது உடல்களை மீட்டனர்.
மூணாறு வட்ட வாடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாலகிருஷ்ண பெருமாள் 51, சின்னம்மாள் 38, ஆகியோர் இறந்தனர். கோட்டையம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அப்ப்ச்சன் 80, இறந்தார். இங்கு பாறை சரிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த சங்கீதா 35, என்ற சுற்றுலாப்பயணி இறந்தார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் சுற்றுலா மையங்களில் மழை முடியும் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது.