கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி
கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!
கொலை செய்ததை, அவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் ரத்தம் வடியும் கத்தியை தங்களது வாயில் வைத்தபடி செல்ஃபியும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு போதையில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டை பூட்டாமல் இருவரும் உறங்கியுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வீட்டிற்குள் நுழைந்து அஸ்வினை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் சுத்தியால் அவரது உடலை பலமாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகளை கொலையாளிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் ரத்தம் வடியும் கத்தியை தங்களது வாயில் வைத்தபடி செல்ஃபியும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் அஸ்வின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோடாங்கிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்றபோது இருவரும் தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தில் இருந்து குதித்த மாதேஷ்க்கு கை முறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் மடக்கி பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். கை முறிவு ஏற்பட்ட மாதேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாதேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அஸ்வினிடம் மதுவாங்கி தருமாறு கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்வின் இருவரையும் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் அஸ்வினை இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.