'கொள்கை எதிரிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிய தவெக'
'கொள்கை எதிரிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிய தவெக'- தேசிய பிம்பத்தைக் கட்டமைக்கிறதா?
கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை தவெக மற்றும் தமிழ்நாடு அரசின் குரலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலிக்கச் செய்ய முதலமைச்சர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Published : August 8, 2026 at 7:00 PM IST
சென்னை: மாநிலங்களுக்கான நிதி பகிர்வு மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தனது அழுத்தமான எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. தமது கொள்கை எதிரியான பாஜகவுக்கு எதிரான தவெக தலைமையின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் அக்கட்சியை தேசிய அளவில் கட்டமைக்கும் முயற்சியா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
கட்சித் தொடங்கியது முதல் முதலமைச்சர் அரியணை வரை
கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி 02- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய விஜய், தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக எனவும் சூளுரைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற தவெக பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் பாஜகவையும், திமுகவையையும் விஜய் நேரடியாக விமர்சித்து வந்தார்.
ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது மக்களைச் சந்தித்த விஜய், திமுக மீது மட்டுமே கடும் விமர்சனங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வாக்குகளைச் சேகரித்தார். இதன் பலனாக விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது. தேர்தலில் திமுக, அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்க போதியளவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மே 10- ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சரான பிறகு பாஜகவை விமர்சிப்பதைத் தவிர்த்த விஜய்
முதலமைச்சரான பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், கரூரில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்திலும் பாஜகவையும், பிரதமரையும் விமர்சிப்பதை விஜய் தவிர்த்து வந்தார். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை வரவேற்பேன் என்றும், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை விமர்சிக்க மாட்டேன் என்றும் நேரடியாகவே அறிவித்திருந்தார்.
பிரதமருடன் இருமுறை சந்திப்பு
கடந்த மே 27- ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதன்முறையாகச் சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி, மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியிருந்தார். அதன்பிறகு, ஜூன் 11- ஆம் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பிரதமரை இரண்டாவது முறையாக மீண்டும் சந்தித்துப் பேசினார். அத்துடன், அன்றிரவு மத்திய அரசு அளித்த விருந்தில் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடியவாறு உணவருந்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
விஜய்யைத் தவிர்த்த அமித் ஷா
டெல்லிக்கு முதலமைச்சர் விஜய் இரண்டு முறை பயணம் மேற்கொண்டிருந்தாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஒருமுறைக்கூட சந்திக்கவில்லை. முதலமைச்சர் தரப்பில் சந்திப்பிற்கான நேரம் கேட்கப்பட்டதாகவும், விஜய்யைச் சந்தித்த அமித் ஷா மறுப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்தன. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் முதலமைச்சர்களையும் அமித் ஷா சந்தித்து வருவது நினைவுக்கூறத்தக்கது.
தேசிய கட்சிகளுக்கு இணையான செய்தித் தொடர்பாளர்களை நியமித்த தவெக
மாநில கட்சிகள் பொதுவாக செய்தித் தொடர்பாளரை நியமிப்பதில்லை. அப்படியே நியமித்தாலும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் அதிகபட்சம் இருவர் மட்டும் நியமிக்கப்படுவர். ஆனால் கடந்த ஆக.03- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைமை, அமைச்சர்கள் தலைமையிலான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் மாநில செய்தித் தொடர்பாளர்களாக ஒன்பது பேரும், தேசிய செய்தித் தொடர்பாளர்களாக எட்டு பேரும் இடம் பெற்றிருந்தனர்.
இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளே தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற ஒரு கட்சிப் பொறுப்பையே உருவாக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, தேசிய அளவில் தவெகவை விரிவடைய செய்வதற்கான ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கப்பட்டது.
தவெகவின் அடுத்தடுத்த பாஜக எதிர்ப்பு வியூகங்கள்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மரிய வில்சன், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநிலங்களுக்கான நிதி பங்கீடு தொடர்பான தனிநபர் மசோதாவைக் கொண்டு வந்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசை தவெக அரசு எதிர்க்கவில்லை என்று எழுந்த விமர்சனங்கள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
இதேபோல், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சிகளும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு குறித்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் தவெக ஆதரவு குரல்
கடந்த ஏப்ரல் 17- ஆம் தேதி கூடிய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறைச் சட்டத்திருத்த மசோதா 2026 அறிமுகம் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றிருந்த நிலையில் வாக்கெடுப்பின் போது 298 எம்பிக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மசோதா தோல்வியடைந்தது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுத் தேவை.
இந்த சூழலில் நடப்பு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைச் சட்டத்திருத்த மசோதா 2026-ஐ மீண்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்து, உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களின் பிரிதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பதால் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை முதலமைச்சர் தலைமையில் நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அழைப்பை புறக்கணித்திருந்தனர்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத தவெக ஆலோசனை செய்வது ஏன்?
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பியைக் கூட வைத்திருக்காத தவெக அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தை நடத்துவது ஏன்? இந்த ஆலோசனைக் கூட்டத்தால் என்ன பயன்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. தனது கூட்டணிக் கட்சி எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் தவெகவின் குரலை ஒலிக்கச் செய்யவும், தேசிய அரசியலில் தவெகவும் உள்ளது என்பதை நிரூபிப்பதற்குமே என்பது இந்த கேள்விகளுக்கான அரசியல் விமர்சகர்களின் பதிலாக உள்ளது.
நாராயணன் திருப்பதி பிரத்யேக பேட்டி
மத்திய பாஜக அரசுக்கு எதிரான தவெகவின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை ஈடிவி பாரத் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டது."ஒவ்வொரு மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை நிதிப் பகிர்வு ஆணையம் தான் முடிவு செய்கிறது. இதனால் மத்திய அரசுக்கும், நிதிப் பகிர்வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. நிதிப் பகிர்வை செயல்படுத்தும் இயந்திரமாக தான் மத்திய அரசு உள்ளது. பல்வேறு காரணிகள் அடிப்படையில் தான் நிதிப் பகிர்வு வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் என்ற அடிப்படையில் விஜய், எம்பிக்கள் கூட்டத்தை முன்னெடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை என்பது காலத்தின் கட்டாயம். இது அரசியல் கட்சிகளுக்கானது அல்ல; இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கானது; வாக்காளர்களுக்கானது.
மக்களவைத் தொகுதி மறுவரையறை 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுச் செய்யப்பட்ட ஒன்று. பல்வேறு தொகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறையால் ஒவ்வொரு மாநிலத்திலும் 50% தொகுதிகள் அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர்.
மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மறுவரையறையால் பட்டியலின, பழங்குடியின எம்பிக்கள் அதிகளவில் நாடாளுமன்றத்திற்கு நுழைய வாய்ப்புள்ளது; அதேபோல், தமிழ்நாட்டிற்கும் நன்மையைத் தரும்" என்று தெரிவித்துள்ளார்.