கோவை கல்லூரி மாணவன் கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும்: முத்தரசன்
கோவை கல்லூரி மாணவன் கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும்: முத்தரசன்
அரசு ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மாநில அரசு சொந்தமாக முடிவெடுக்குமா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published : August 15, 2026 at 7:40 PM IST
ஈரோடு: கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடை பயணம் நிறைவு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகும் பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் திட்டம், வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி மூன்று லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு, மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு, கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் கொடுக்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் ஆகியவை அறிவித்துள்ளார்கள். அதை வரவேற்கிறோம்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தெளிவு இல்லாமல் உள்ளது. மானிய கோரிக்கை விவாதத்தின் போது இது தொடர்பாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார்கள். இது சம்பந்தமான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாய் தருவதாக கூறினார்கள். அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
முக்கியமான கோரிக்கை விவசாய பயிர் கடன் தள்ளுபடி. தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி தள்ளுபடி அறிவிக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பால் 90 சதவீத விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வாக்குறுதி அளித்தபடி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே த.வெ.க. அரசு தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்க வேண்டும். கோவை கல்லூரி மாணவன் கொலை வழக்கில் முறையான உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கினால் மட்டுமே செயல்படுத்த முடியும் என நிதியமைச்சர் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக மாநில அரசு சொந்தமாக முடிவெடுக்க போகிறதா? அல்லது பா.ஜ.க. அரசு சொல்வதைக் கேட்கப் போகிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசு சொல்வதைக் கேட்டால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்காமல் உள்ளது. மேகதாது அணை கட்டுவது போன்ற விஷயங்களில் மத்திய அரசு கர்நாடகவை சார்ந்து மட்டுமே முடிவு எடுக்கிறது. இதே போல் தேசிய கல்விக் கொள்கை விவகாரம், பேரிடர் மேலாண்மை நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசுடன் ஒத்துப்போக முடியுமா?
ஒத்துப் போக வேண்டிய விஷயங்கள் மட்டும் தான் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் ஒத்துப் போக வேண்டும். அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்காதது அவர்கள் விருப்பம். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சதி நடக்கிறது. அந்த சதிவலையில் யாரும் சிக்கக்கூடாது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.