கோவை மாணவன் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல
கோவை மாணவன் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல - உதயநிதி ஸ்டாலின்
100 நாள் சாதனை என்று பெருமை பேசும் இதே நேரத்தில், நூறு நாட்களில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசம் அடைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Published : August 17, 2026 at 10:51 AM IST
சென்னை: கோவை மாணவன் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று காலை 9.30 மணியளவில் கூடியது. அப்போது, கோயம்புத்தூர் மாணவன் அமுதன் கொலை தொடர்பாக, தி.மு.க சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தரப்பில் விவாதம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார். 10 பேர் சண்டை போட்டு, பத்து பேர் மோதினால் அது கோஸ்ட் மோதல். ஆனால் ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதனால் இது படுகொலை.
மானவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர். போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும்.
ஆனால் போதைப்பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற போலீசார், குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்துள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
போதைப்பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள்.
இவ்விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் போராட்டம் நடத்தியுள்ளோம். இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாகக் கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தாலும், காவல்துறையின் பொறுப்பற்ற போக்காலும் தான் இந்த கொலை அரங்கேறியுள்ளது.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம். சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் திருவொற்றியூரை சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக்கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர். இந்த அரசு போதைப்பொருள் தடுப்பு படையை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். அதை சொல்லி பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளீர்கள். ஆனால் களத்தில் நடப்பது வேறு மாதிரி உள்ளது.
நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் படுனெல்லி கிராமத்தில் போதை கும்பலால், சந்துரு விக்கி ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில் தனலட்சுமி பூவரசி ஆகிய தாய் மகள் இருவரையும் இரட்டைக் கொலை செய்தனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் அம்பத்தூரில் வைதேகி என்ற இளம் பெண்ணை கொலை செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தாமரைச்செல்வி என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி, கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் வயதான பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர், “கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உள்ள பொருள் குறித்து மட்டுமே பேரவையில் விளக்கம் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் நடைபெறும் மற்ற சம்பவங்களை தெரிவிப்பதற்கான நேரம் அல்ல இது” என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “கடந்த ஒரு வாரத்தில் கொலைகள் மட்டுமல்ல, பாலியல் குற்றங்களும் அதிகமாக நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலில் குற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது வரும் இரண்டாவது பாலியல் குற்றச்சாட்டு இது.
100 நாள் சாதனை என்று பெருமை பேசும் இதே நேரத்தில், நூறு நாட்களில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசம் அடைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. இதைத் தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
பள்ளிக் கல்லூரிகளில், வன்முறைக்கு எதிராகவும், ஒழுக்கத்தை வளர்த்தெடுக்கவும் கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டும். போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர இந்த அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.