📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 06, 2026 06:04 PM

கோவை: வீட்டில் தங்கி திருடிய கொள்ளையர்கள் கைது

கோவை: வீட்டில் தங்கி திருடிய கொள்ளையர்கள் கைது

கோவை: கோவையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்ததுடன், அதே வீட்டில் ஐந்து நாள்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு ஓய்வெடுத்த ஆறு பேர் கொண்ட திருட்டுக்கும்பலைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் சேஷகிரி, 70. அவர் கடந்த மாதம் பெங்களூரில் உள்ள தன் மகனைப் பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தார். அதையறிந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்குப் பூசை அறையில் இருந்த வெள்ளித்தட்டுகள், பூசைப் பொருள்கள், சமையலறைப் பாத்திரங்கள் உள்ளிட்ட ஒன்பது கிலோ வெள்ளி, ஏழு கிலோ பித்தளைப் பொருள்களைத் திருடினர்.

வெறும் திருட்டோடு நிற்காமல், அந்த வீட்டில் யாருமில்லாத துணிச்சலில் தொடர்ந்து ஐந்து நாள்கள் தங்கி, சமையல் செய்து சாப்பிட்டுத் தூங்கி ஓய்வெடுத்தனர்.

சேஷகிரி கோவை திரும்பிய பின்னர்தான், வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி திருடர்களைக் கைதுசெய்தனர். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.