📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 08, 2026 04:33 PM

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்

சென்னை: கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக இருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆணை உட்பட பல்வேறு ஆணைகள் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும், மாதவாரியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குரிய பங்கை பெறுவது பல ஆண்டுகளாகவே சவாலாக உள்ளது. இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கர்நாடக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வரால் கேட்டுக்கொள்ளப்பட் டது. இந்த பேச்சுவார்த்தையை பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடத்த முடிவு செய்யப் பட்டது.

இதற்கிடையே அன்றைய தினம் பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. மற்றொரு நாளில் நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கர்நாடக முதல்வர் கூறியதால் குறிப்பிட்ட நாளில் சந்திப்பு நடைபெறவில்லை. கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மேம்பட்டு வருகிறது. எனினும், கர்நாடகாவில் இருந்து தொடர்ச்சியான நீர்வரத்து, மேட்டூர் அணையின் நீர் இருப்பு, டெல்டா பாசனத் தேவைகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, தினமும் நிலைமையை தமிழக அரசு கண்காணித்து வருகிறது.

சூழ்நிலைக்கு தகுந்தபடி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும். காவிரி உரிமை தொடர்பாக எந்த நிலையிலும் தமிழக அரசு சமரசம் செய்துகொள்ளாது.

சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. டெல்டா விவசாயிகளின் நலன், குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வமான காவிரி உரிமை ஆகியவற்றை முழுமையாக பாதுகாப்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

காவிரி படுகையில் புதிய நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நீர்வளக் குழுமம் 2025 டிசம்பரில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியது.

காவிரி படுகை ஒரு பற்றாக்குறை படுகையாகும். எனவே, எவ்வித புதிய திட்டம் செயல்படுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்பதால் இந்த வழிகாட்டுதல்களை திரும்பப்பெறுமாறு மத்திய நீர்வளக் குழுமத்தையும், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தையும் கேட்டுக்கொண் டோம்.

அதேநேரம் அந்த வழிகாட்டுதல்களை திரும்பபெறாததால் கர்நாடகா இவற்றை பயன்படுத்தி புதிய திட்டம் தயாரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, இந்த வழிகாட்டுதல்களை திரும்பப்பெறுமாறு மத்திய நீர்வளக் குழுமத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணையை தடுப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, மாநிலத்தின் உரிமையை நீர்த்துபோகவிடாமல் தொடர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.