கருணை திட்டத்துக்கு பொருத்தமான பெயர்
பள்ளி மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எல்லா முதல்-அமைச்சர்களின் பங்களிப்பும் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிதாமகன் பெருந்தலைவர் காமராஜர்தான் என்றாலும், அதற்கு தொடக்கவுரை எழுதியது நீதிக்கட்சிதான். 1920-ல் நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது சேரன்மகாதேவிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி நின்ற காமராஜர், அங்கு ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்து அவனை அழைத்து, “நீ ஏன் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். அந்த நேரத்தில், அவர் முதல்-அமைச்சர் என்று தெரியாமல், "பள்ளிக்கூடத்துக்குப் போனால் யார் சோறு போடுவார்கள்?" என்று அந்த சிறுவன் அளித்த பதில் காமராஜரின் நெஞ்சை தொட்டது. "சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று அவர் கேட்டதற்கு, "ஓ! போவேனே" என்று சிறுவன் அளித்த பதில், மதிய உணவு திட்டத்துக்கான விதையை அவருடைய மனதில் விதைத்தது.
அந்த சிறுவனின் பதிலால் உந்தப்பட்டு, அவர் 1956-57-ம் ஆண்டு பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தார். பள்ளிகளில் மாணவர் வருகை கூடியது. இதேபோல், சிறுவயதில் பசிக்கொடுமையை உணர்ந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது 'தினத்தந்தி' அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், இந்த திட்டத்துக்காக முதல் சத்துணவு கூடத்தை தனது தந்தையார் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் கட்டிக்கொடுத்தார். முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு நேரில் சென்று அந்த சத்துணவு கூடத்தை திறந்து வைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வயிறார சத்துணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின்பு, சத்துணவு சத்தான உணவாக இருக்கும் வகையில், சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தினமும் முட்டை வழங்குவதையும், கலவை சாதம் வழங்குவதையும் நடைமுறைப்படுத்தினார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த நேரத்தில் சென்னை அசோக்நகர் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது காலை உணவு சாப்பிடாத மாணவிகள் சோர்வாக இருந்ததை பார்த்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். இது மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த காலை உணவு திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்துவதாகவும், இந்த திட்டம் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் இனி காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உயரும். மாணவர்கள் வீட்டில் அவசர, அவசரமாக சாப்பிடும் நிலை மாறி பள்ளிகளுக்கு வந்து பசியாறிவிட்டு, ஏட்டு கல்வியை தொடருவார்கள். இதுமட்டுமல்லாமல், காலை உணவு திட்டத்துக்கு, பள்ளிகளில் உணவளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பெயரையே சூட்டியுள்ளார். ஒரு உன்னத திட்டத்துக்கு அவரது கொள்கை தலைவரும், கருணைமிகு தலைவருமான காமராஜரின் பெயர் வைத்தது மிகப்பொருத்தமானது மட்டுமின்றி வரவேற்புக்குரியதும் ஆகும். காமராஜருடைய புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.