கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கிய அரசுப்பணி ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
புதுடில்லி: கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய உத்தரவை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு வழங்கிய பணி செய்வதற்கான உத்தரவுகளை முதல்வர் விஜய் வழங்கி இருந்தார்.
இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கல் செய்தார். இதே போல, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலர் சீனி அகமது, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சந்தோஷ் குமார் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, தமிழக அரசு வழங்கிய பணி நியமனத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டதுடன், 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கி, அரசு உதவியிருக்கலாம்; அது, பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்' என, கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.