📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 07:31 PM

கடைசி விளையாட்டுத் திடலான மாநகர பூங்காக்களில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ஈடிவி பாரத்தின் கள ஆய்வு

கடைசி விளையாட்டுத் திடலான மாநகர பூங்காக்களில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ஈடிவி பாரத்தின் கள ஆய்வு

கடைசி விளையாட்டுத் திடலான மாநகர பூங்காக்களில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ஈடிவி பாரத்தின் கள ஆய்வு

ஒரு குழந்தை சுதந்திரம், நட்பு, தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளும் முதல் இடம் பெரும்பாலும் பூங்காவாகத்தான் இருக்கும். அந்த இடம் ஆபத்தானதாக மாறும்போது, ​​அந்தத் தோல்வி நிர்வாகரீதியானது மட்டுமல்ல; சமூகரீதியானதாகவும் மாறுகிறது.

Published : May 25, 2026 at 9:01 AM IST

Updated : May 25, 2026 at 12:34 PM IST

இந்தியாவின் உள்ள காங்கிரீட் நகரங்களில், குழந்தைப் பருவத்திற்கான பாதுகாப்பான இடங்கள் குறைந்து வருகின்றன. நகர்ப்புறங்களின் நுரையீரல்களாக திகழும் பூங்காக்கள், தற்போது வெறும் அலங்கார இடங்களாகவும், ஆடம்பர இடங்களாகவும் மாறிவிட்டன. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பவே அஞ்சும் இடங்களாகவும் பூங்காக்கள் உருவெடுத்துள்ளன.

ஒரு துயரமான சம்பவம்

2026, மார்ச் 29 ஒரு துயரமான நாள். அன்று மாலை, ஜெய்ப்பூரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், பொழுது போக்கிற்காக அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றாள். பூங்காவில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, துருப்பிடித்த அந்த ஊஞ்சல் சிறிது நேரத்தில் அவள் மீது முறிந்து விழுந்தது. அதன்பிறகு அந்த சிறுமிக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டடன. மைதானத்தில் விளையாட வேண்டிய சிறுமி மருத்துவமனையில், மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு பொழுதை கழிக்க வேண்டியதாகிவிட்டது.

இது, ஜெய்ப்பூரில் மட்டும் நடந்த ஒரு தனிப்பட்ட விபத்து அல்ல. இதை ஒரு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். ஏனெனில் வேகமாக விரிவடைந்து கொண்டே செல்லும் காங்கிரீட் நகரங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், மாயமாகி வரும் திறந்தவெளியிடங்கள் ஆகியவற்றால் குழந்தைப்பருவம் சுருங்கி வருகிறது.

ஒரு காலத்தில் பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்ட பூங்காக்கள், உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் புறக்கணிப்பால், பாதுகாப்பற்ற பகுதிகளாக மாறி வருகின்றன.

உடைந்த ஊஞ்சல்கள், வெளியே தெரியும் மின்சார ஒயர்கள், இடிந்து விழும் நிலையில் இருக்கும் சுவர்கள், துருப்பிடித்த உடற்பயிற்சி உபகரணங்கள், குவிந்து கிடக்கும் குப்பைகள், போதிய வெளிச்சமின்றி எரியும் மின்விளக்குகள், இரவில் அரங்கேறும் சமூக விரோதச் செயல்கள் என பூங்காவிற்குள் ஒருமுறை சென்றாலே அது, எந்த அளவுக்கு அபாயம் நிறைந்ததாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பான இடமாக இருந்த பூங்காக்களின் நிலைமை தற்போது மாறிவிட்டது.

ராஜஸ்தானில் தொடங்கி, இந்தியா முழுவதும் குழந்தைகள் பூங்காக்களின் நிலை, பாதுகாப்பு மற்றும் பூங்காக்கள் மூடப்படுவது குறித்து நாடு தழுவிய ஒரு களஆய்வை மேற்கொள்ள "ETV பாரத் முடிவு" செய்தது.

“தி லாஸ்ட் பிளேகிரவுண்ட்” என்ற இந்த பெயரிலான இந்த பிரச்சாரம், “தோட்டங்களின் நகரம்” என்று ஒரு காலத்தில் பெருமையுடன் அழைக்கப்பட்ட மகாராஷ்டிராவின் புனே நகரில் இருந்து இந்தியாவின் முதல் பிரத்யேக குழந்தைகள் பூங்காவான டெல்லியில் உள்ள லூட்டியன்ஸ் பூங்கா வரை நடைபெற்றது. ஒடிசா, பீகார், கர்நாடகாவில் உள்ள பூங்காக்களில் நடந்த விபத்துகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், போதைப்பொருள் மற்றும் சமூக விரோத சக்திகளிடமிருந்து பொது இடங்களை மீட்க 'பூங்கா நண்பர்கள்' எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

ஆனால் இந்த பிரச்சாரம் சிதிலமடைந்த பூங்காக்களைப் பற்றியதாக மட்டுமல்ல. மறைந்து போகும் குழந்தைப் பருவத்தை பற்றியதாகவும் உள்ளது. நம் குழந்தைகள் ஓடுவதற்கும், சிரிப்பதற்கும், சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் வளர்ந்து வருவதை பற்றியதாகவும் உள்ளது.

இது, அரசு, உள்ளாட்சி அமைப்புகள், சமூக அமைப்பிடம் ஒரு கடினமான கேள்வியை எழுப்புகிறது. அதாவது, பூங்காக்களில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? பூங்காக்களுக்கு உள்ளேயே நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், நாம் எப்படிப்பட்ட நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ETV பாரத்தின் தேசிய அளவிலான கள ஆய்வுப் பயணம், ராஜஸ்தானில் இருந்து தொடங்கி உள்ளது.

ராஜஸ்தானில் நிலை

2026 மார்ச் 29 அன்று, ஜெயப்பூரில் ஒரு சாதாண மாலைப்பொழுது, ஒரு பெரிய கொடுங்கனவாக மாறியது. சிகார் சாலைக்கு அருகில் உள்ள தனியார் பூங்காவுக்குள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது, துருப்பிடித்த ஊஞ்சல் முறிந்து விழுந்தது. பலத்த காயமடைந்த அந்த சிறுமி, அங்கேயே மயக்கம் அடைந்தார். அந்த சிறுமிக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போது வீட்டில் வலியுடன் அவர் போராடி வருகிறாள்.

இந்த சம்பவம் நடந்த உடனே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஹர்மதா நகர காவல் நிலைய போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில், போலீசார் விசாரித்து, பூங்காவின் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களின் அலட்சியத்தை குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இருப்பினும், மே 8ஆம் தேதி, ஜெய்ப்பூர் பெருநகர நீதித்துறை நடுவர், போலீசாரின் விசாரணையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி விசாரணை அதிகாரி ஹரி மீனாவிடம் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பினார். பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு 2 மாதங்கள் அவகாசம் தரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், குழந்தைகள் தினமும் விளையாடும் ஊஞ்சலுக்கு முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை என்று விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பூங்காவில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கட்டாய சோதனைகள் நடைபெறவில்லை. ஆனால், அதன் பாதிப்புகளை குழந்தை அனுபவிக்கிறது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.

இதேபோல், ஜூலை 15 2021 அன்று, ஜெய்ப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மானசரோவர் பகுதியில் உள்ள வருண் பாத் என்ற இடத்தில் உள்ள ஒரு பூங்காவில், திறந்த நிலையில் இருந்த மின்சாரக் கம்பிகளில் கால் பட்டதால் 10 வயது சிறுவன் உயிரழந்தான். அந்த கம்பிகள் பல நாட்களாக திறந்த நிலையில் கிடந்ததாகவும், அதுகுறித்து புகார்கள் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மே 4, 2026 அன்று, பரன் மாவட்டத்தின் அண்டா நகரில் பல கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட பூங்காவில், திறப்பு விழா நடந்த 3 நாட்களுக்குப் பிறகு, குழந்தைகள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஊஞ்சல், அடியோடு உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் நூலிழையில் குழந்தைகள் உயிர் தப்பினர்.

ராஜஸ்தான் பூங்காக்கள் குறித்த களநிலவரம்

பௌண்ட்ரிக் உத்யான் பூங்கா

ஆனால் பூங்காவிற்குள் நுழையும்போதே அது முறையான பராமரிப்பின்றி இருப்பது தெளிவாக தெரிகிறது. பூங்காவிற்குள் பெரும்பாலான ஊஞ்சல்கள் சேதமடைந்துள்ளன. சிலவற்றின் இரும்பு கம்பிகள் உடைந்து வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

இதுகுறித்து தால் கடோராவைச் சேர்ந்த கம்லேஷ் சோனி என்பவர் கூறுகையில், “இந்த பூங்காவிற்கு காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். ஆனால், இங்கு குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பான வசதிகள் இல்லை” என்றார்.

பூங்காவில் நடைபாதையும் நன்றாக இல்லை. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பெயர்ந்து கிடக்கும் ஓடுகள்ர, பள்ளங்கள் ஆகியவற்றால் இந்த பாதையில் நடைப்பயிற்சி செல்லும் வயதானவர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பூங்காவில் உள்ள சிமெண்ட் இருக்கைகளும் சேதம் அடைந்துள்ளன. பூங்கா தூய்மையாகவும் இல்லை. பூங்காவிற்குள் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்கடி சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

பூங்காவிற்கு வரும் பெண்களும் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். பூங்காவில் நிரந்தராமக பாதுகாவலர் யாரும் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதக் கும்பல்கள் கூடுவதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பங்கள் நடக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பூங்காவின் பாதுகாவலர் ராஜு கூறுகையில், "நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பூங்காவுக்கு வருபவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்தால், எங்களுடன் சண்டையிட்டு மிரட்டுகிறார்கள். பல முறை புகார் அளித்தும் இதுவரை குறிப்பிடும்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

அஜ்மீர் பூங்காக்களிலும் இதே நிலை

அஜ்மீர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அரசு பூங்காக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள சாஸ்திரி நகரில் மட்டும் நான்கு பூங்காக்கள் உள்ளன. இரண்டு பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மற்ற இரண்டு பூங்காக்கள் நடைப்பயிற்சி செல்பவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இங்குள்ள பூங்காக்களை வெளியில் இருந்து பார்க்கும்போது நன்றாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், உள்ளே சென்று உற்றுக் கவனித்தால் அது எந்த அளவு சிதிலமடைந்து இருக்கிறது என்பது தெரியவரும்.

நம் ஈடிவி பாரத் குழுவினர், லால் பகதூர் சாஸ்திரி பூங்காவிற்குள் சென்று அங்கிருந்த பெரிய சறுக்குப்பாதையை ஆய்வு செய்தனர். அப்போது லேசாக அசைத்ததற்கே, அந்த சறுக்குப்பாதை தள்ளாடியது. குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தாலும், எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களின் முகங்களில் தெளிவாகத் தெரிந்தது.

இதுகுறித்து டாக்டர் எஸ்.டி.மிஸ்ரா என்ற சமூக ஆர்வலர் கூறுகையில், "இந்தப் பூங்கா சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பூங்கா பாழடைந்து கிடக்கிறது. பொதுமக்கள் மக்கள் தினமும் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சிக்கு வருகிறார்கள். குழந்தைகள் விளையாட வருகிறார்கள். சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் யாரும் ஆய்வு செய்யவோ அல்லது அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்று சரிபார்க்கவோ வருவதில்லை” என்றார்.

பூங்காவில் உள்ள டிரெட்மில் இயந்திரத்திற்கு கிரீஸ் போடாததாலும் பராமரிப்பு இல்லாததாலும் உரத்த சத்தத்தை எழுப்புகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்பட்டு விட்டது. பகல் நேரங்களில் சமூக விரோத கும்பல்கள், பூங்காவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, சீட்டு விளையாடி, குழந்தைகளை அச்சுறுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அஜ்மீர் மாநகராட்சியின் பூங்காக்களின் பொறுப்பு அலுவலர் மனோகர் சோங்கராவிடம் கேட்டதற்கு, "அஜ்மீர் மாநகராட்சியில் உள்ள 51 பூங்காக்களையு்ம குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்கிறோம். பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள ஊஞ்சல்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கருவிகள் பழுதடைந்தால் உடனடியாகச் சரிசெய்யப்படுகின்றன," என்று பதில் அளித்தார்.

விளையாட்டு உபகரணங்கள் தொடர்பான விபத்துகளைத் தடுப்பதற்காக, மற்ற பூங்காக்களில் உள்ள ஊஞ்சல்களும் ஆய்வு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கோட்டாவின் நேரு பூங்கா

கோட்டா நகரில் உள்ள நேரு பூங்கா, நாயாபுரா மற்றும் கோட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. நகரின் சில முக்கிய பொது பூங்காக்களில் ஒன்றாக நேரு பூங்கா உள்ளது.

இங்கு யோகா, நடைப்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக பெருமளவிலான மக்கள் இங்கு வருகிறார்கள். பூங்காவில் பாதுகாப்பான சூழல் இருக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் ஏமாற்றத்துடனே திரும்பிச் செல்கின்றனர். ஏனெனில் இங்கு உடைந்த ஊஞ்சல்களும், உடற்பயிற்சிக் கருவிகளுமே அனைவரின் கண்களுக்கு தெரிகின்றன.

பூங்காவில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் பூங்காவிற்கு வருபவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொள்ள வேண்டியுள்ளது.

குப்பை நிரம்பிய தள்ளுவண்டிகள் பூங்காவின் மூலைகளில் அப்படியே குவிக்கப்பட்டு, துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. பெண்களுக்கான கழிப்பறைகளில் பூச்சிகள் இருப்பதாகவும், அவை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இங்குள்ள பூங்காக்கள் இரவு நேரங்களில் போதை அடிமைகளின் கூடாரமாக மாறிவிடுகின்றன.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சந்திர பிரகாஷ் மிட்டல் என்பவர் கூறுகையில், இங்குள்ள பூங்காவில் முறையான துப்புரவுப் பணிகளோ, பராமரிப்புப் பணிகளோ நடைபெறுவதில்லை. நடைப்பயிற்சிப் பாதை, முழங்கால்களையும், மூட்டுகளையும் பதம் பார்க்கும் அளவுக்கு உள்ளது" என்றார்.

இதே கருத்தை தாட்படா பகுதியைச் சேர்ந்த மகேஷ் யோகி என்பவரும் கூறினார். அவர், "பூங்காவில் ஊஞ்சல்கள் உடைந்து கிடக்கின்றன. குழந்தைகள் எந்நேரமும் கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. துருப்பிடித்த இரும்புப் பாகங்களை யாரும் கண்டுகொள்வதில்லை" என்று கூறினார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து கோட்டா மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் முகேஷ் சௌத்ரி கூறுகையில், "கோட்டா நகர் முழுவதும் உள்ள 587 பூங்காக்களை நிர்வகித்து வருகிறோம். அனைத்து பூங்காக்களிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊஞ்சல்கள் முதல் மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பறைகள், நடைப்பயிற்சிப் பாதைகள் வரை பல்வேறு வசதிகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில் 47 பூங்காக்களில் பணிகள் இன்னும் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளன" என்று கூறினார்.

ஆறுதல் தரும் பூங்காக்கள் நோயுற்ற நிலையில்

பூங்காக்கள் என்பவை காங்கிரீட் நகரங்களுக்குள் அமைந்துள்ள வெறும் பசுமையான பகுதிகள் மட்டுமல்ல. அவை குழந்தைகளின் உணர்வுசார்ந்த வளர்ச்சிக்கும், உடல் தகுதிக்கும், மனநலத்திற்கும் மிக முக்கியமானவை.

இதகுறித்து ராஜஸ்தான் உள்ளாட்சித் துறைச் செயலாளர் ரவி ஜெயின் கூறுகையில், "மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள ஊஞ்சல்கள், உடைந்த நிலையில் இருக்கக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன. இந்த ஊஞ்சல்களை தேவைப்படும்போது பழுதுபார்க்கவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரவில் போதிய வெளிச்சத்தை உறுதி செய்யவும், திறந்த மின் கம்பிகள் இல்லாதிருப்பதை உறுதி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வரம்பிற்குள் வரும் அனைத்து பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் விபத்து நடைபெறும் இடமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான களஅறிக்கை விரைவில் தொகுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

விவாதத்திற்குரிய கேள்வி

ஆனால், ஒரு பெரிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், பூங்காக்கள் மட்டும் ஏன் இன்னும் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்ற முத்திரை, பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒரு பூங்காவிற்குள் குழந்தைகள் பாதுகாப்பாக ஊஞ்சலைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அந்த நகரத்தை வளர்ந்த நகரம் என்று தன்னை கூறிக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு குழந்தை சுதந்திரம், நட்பு மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளும் முதல் பொது இடம் பெரும்பாலும் பூங்காவாகத்தான் இருக்கும். அந்த இடம் ஆபத்தானதாக மாறும்போது, ​​அந்தத் தோல்வி நிர்வாக ரீதியானது மட்டுமல்ல. அது சமூக ரீதியான தோல்வியாகவும் மாறுகிறது.