கடையடைப்பு... ஆர்ப்பாட்டம்... ராஜினாமா... முதல்வருக்கு எதிராக வெடித்த உட்கட்சி பூகம்பம்!
கடையடைப்பு... ஆர்ப்பாட்டம்... ராஜினாமா... முதல்வருக்கு எதிராக வெடித்த உட்கட்சி பூகம்பம்!
டி.கே.சிவக்குமார் எந்த விஷயத்திலும் அதிரடியாக முடிவெடுக்கிறார். ஆனால், அந்த அதிரடிதான் இப்போது கட்சிக்கே எதிராகத் திரும்பியிருக்கிறது.
“எதிர்க்கட்சிகளை அலறவிட்ட முதல்வர், இப்போது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களாலேயே அலறவிடப்படுகிறார்!” - இதுதான் கர்நாடக அரசியலின் தற்போதைய ஹாட் டாக்.
கடந்த ஜூன் 3-ம் தேதி 13 அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற டி.கே.சிவக்குமார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 3-ம் தேதி அமைச்சரவையை விரிவுபடுத்தி, மேலும் 19 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கினார். அமைச்சரவை விரிவாக்கம் மூலம் அதிருப்தியை அடக்க நினைத்த அவருக்கு, அதுவே எதிர்பாராத அரசியல் தலைவலியாக மாறியிருக்கிறது.
அமைச்சரவைப் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிருப்தியில் இருக்கும் மூத்த எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அதிருப்தியின் உச்சமாக, யஷ்வந்தராய கவுடா, பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். மேலும் சில எம்.எல்.ஏ-க்களும் அதே முடிவை எடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதால், கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது.
‘குவாரிகளின் ராஜா’, ‘கேம் சேஞ்சர்’ என்று அரசியல் வட்டாரங்களில் அழைக்கப்படும் டி.கே.சிவக்குமார், இரண்டரை ஆண்டுகள் பதவியை விட மறுத்த சித்தராமையாவுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அந்த நாற்காலியில் அமர்ந்த சில நாள்களிலேயே அவருக்கு அரசியல் அதிர்ச்சிகளும் வரிசையாக ஆரம்பமாகின. துணை முதல்வர் பதவி விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியைச் சமாளிக்க சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. விரும்பிய துறை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதவியேற்ற இரண்டே நாள்களில் ராஜினாமாவை அறிவித்தார். பின்னர் கட்சித் தலைமையின் சமரசத்தால் அதை வாபஸ் பெற்றார்.
அதோடு, காவிரி விவகாரமும் டி.கே.சிவக்குமாரைக் கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க மறுத்ததும், மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதமாக நடந்துகொண்டதும் இரு மாநிலங்களுக்கும் இடையே அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தின. பின்னர் அணைகள் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்தது, எதிர்க்கட்சிகளின் கேலிக்கும் விமர்சனத்துக்கும் வழிவகுத்தது.
அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்பு மூத்த எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசித்து, அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். 34 பேர் இடம்பெறக்கூடிய அமைச்சரவையில் தற்போது 33 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமிருக்கும் அந்த ஒரு அமைச்சர் பதவிக்காகவே பல மூத்த எம்.எல்.ஏ-க்கள் போட்டியிடுவதால், உட்கட்சி அதிருப்தி மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
மூன்று முறை வென்ற யஷ்வந்தராய கவுடாவும், சாகர் தொகுதியின் கோபாலகிருஷ்ணாவும் அதிருப்தியின் உச்சத்தில் பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆறு முறை வென்ற தினேஷ் குண்டுராவ், தன்வீர் சேட் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டது தொண்டர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சரானவர்களில் பெரும்பாலானோர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அல்லது சிட்டிங் அமைச்சர்களின் உறவினர்கள் என்ற பேச்சும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
‘இந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எங்கள் கட்சிக்கு வருவார்கள்’ என்று பா.ஜ.க தலைவர்கள் கூறி வருவது சாதாரண விஷயமல்ல. இந்த நிலைமைக்கு டெல்லி தலைமைதான் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றனர்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். மாநிலம் முதல் அகில இந்திய அளவிலான காங்கிரஸ் பொறுப்புகளை நேர்மையாக வகித்திருக்கிறேன். இருந்தும், அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படாததோடு, அதற்கான காரணம்கூட தெரிவிக்கப்படாதது என்னை மிகுந்த ஏமாற்றத்துக்கும் வருத்தத்துக்கும் உள்ளாக்கியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கெல்லாம் பதிலளித்த முதல்வர் டி.கே.சிவக்குமார், “20 காலியிடங்களுக்கு 60 பேர் ஆசைப்பட்டார்கள். அனைவரையும் அமைச்சராக்க முடியாது. தரம்சிங், சித்தராமையா முதல்வராக இருந்தபோது, முதலில் எனக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பொறுமையாக இருந்தால் அனைவருக்கும் வாய்ப்பு வரும். அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும். அதையும் ஏற்காமல் ராஜினாமா செய்வோரின் ராஜினாமாவை உடனே ஏற்றுக்கொள்வேன்” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் பேச்சே அதிருப்தியிலிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை மேலும் ஆவேசப்படுத்தியிருக்கிறது.
டெல்லி காங்கிரஸ் தலைமை இன்னும் அமைதி காக்கிறது. ஆனால், அந்த அமைதியை பா.ஜ.க. மிகவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது. காங்கிரஸின் உட்கட்சிக் குழப்பம் இன்னும் சில நாள்கள் நீடித்தால், அதை அரசியல் வாய்ப்பாக மாற்ற பா.ஜ.க காத்திருக்கிறது என்பதுதான் பெங்களூரு அரசியல் வட்டாரங்களின் கணிப்பு.