கடினமான காலக் கட்டத்தில் இருக்கிறார் ரிஷப் பண்ட்.. எப்போதும் எதிர்மறையான செய்தியே வருது
கடினமான காலக் கட்டத்தில் இருக்கிறார் ரிஷப் பண்ட்.. எப்போதும் எதிர்மறையான செய்தியே வருது- கையிப்
மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தற்போது ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வருவதாக முகமது கைப் குறிப்பிட்டார். பண்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் ஒரு சிறந்த ஆட்டநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதை கைப் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து எதிர்மறையான செய்திகளில் இடம்பெற்று வருவதால் 28 வயதான பண்ட் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்ட கைப், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவர் இன்னும் ஒரு சிறந்த வீரராகவே விளங்குகிறார் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய முகமது கைப், "இந்திய அணியின் மற்ற வகை கிரிக்கெட்டில் அவரது பெயர் பெரிதாக பரிசீலிக்கப்படுவதில்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை, டி20 போட்டிகளிலும் அவரது பெயர் வரவில்லை, மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் கடினமான காலத்தை எதிர்கொண்டார். எனவே, அவர் ஒரு கடினமான கட்டத்தில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
"ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அவரை சற்று வித்தியாசமாக பார்க்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, நான் இன்னும் அவருக்கு ஆதரவளிப்பேன். இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்த ஒரு வீரருக்கு, இன்னும் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகள் வழங்கி அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன்."
"அவர் மீது அதிக அழுத்தம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். அவரது பெயர் ஊடகங்களில் நேர்மறையாக பேசப்படவில்லை. அவர் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துள்ளன. அவர் கேப்டனாக இருந்து அதிக தொகை பெற்ற ஐபிஎல் தொடராக இருக்கட்டும், அதில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை மற்றும் புள்ளிப்பட்டியலில் அணி பின்னுக்குத் தள்ளப்பட்டது."
"இது குறித்தே மக்கள் பேசுகிறார்கள். அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இன்னும் மீண்டு வரவில்லை என்பதால், அவரைப் சுற்றியுள்ள விவாதங்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் எப்போதும் போல ஒரு சிறந்த வீரராகவே விளங்குகிறார்," என்று அவர் கூறினார்.
ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 43.37 சராசரியுடன் 3557 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 அரைசதங்களும், 8 சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் ஆகும்.