📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 01:34 PM

`கடன் எதனால் வாங்கப்படுகிறது?'

`கடன் எதனால் வாங்கப்படுகிறது?'

`கடன் எதனால் வாங்கப்படுகிறது?' - பிரேமலதாவின் ஜப்பான் உதாரணம்! | Live

இன்றைய சட்டசபை நிகழ்வுகளின் தொகுப்பு..!

கடன் எதனால் வாங்கப்படுகிறது? - பிரேமலதாவின் ஜப்பான் உதாரணம்!

``அரசுகள் கடன் வாங்குவதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கு பள்ளிகளிலிருந்தே கடன் வாங்கிதான் கூட்டல் கழித்தல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் கடனில் இருக்கிறது. ஜப்பானில் எல்லாம் கடன் வாங்கி கணக்கை தீர்க்க சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இருப்பதற்குள்ளாகவே மாணவர்களுக்கு கணக்கை தீர்க்க கற்றுக் கொடுப்பார்கள்." - பிரேமலதா

ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்தவில்லையா?

திமுகவின் நாடாளமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சாராய தொழிற்சாலை நடத்துகிறாரா இல்லையா? திமுகவின் பொருளாளர் முன்னாள் அமைச்சர்கள் சாராய ஆலை நடத்தவில்லையா? அதுதான் ஊழல்

எதிர்க்கட்சியினர் லாட்டரி...லாட்டரி என கத்துகின்றனர்.

லாட்டரி கம்பெனியிடம் நீங்கள் ஏன் 900 கோடி ரூபாய் வாங்கினீர்கள்?

- அமைச்சர் ஆதவ்

`900 கோடி கொடுத்தது ஆதவ்வின் மாமாதான். நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்.' - உதயநிதி

`ஏன் கொடுத்தார்கள் என்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும்தான் தெரியும். வீட்டுக்குப் போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்.' - ஆதவ்

தேர்தல் நேரத்தில் எல்லா கட்சிகளுமே தேர்தல் நிதி வாங்கும். அது முறைப்படி கணக்கில் வாங்கும் பணம். அதைப் பற்றி பேச வேண்டிய தேவையில்லை.

திமுகவினர் சாராய ஆலை நடத்துவதாக அமைச்சர் ஆதவ் கூறினார். அரசு உரிமம் கொடுத்துதானே தொழில் செய்கிறார்கள்? அது எதோ திமுகவினால் நடப்பது போல பேசுவதா...

`அமைச்சர் விக்னேஷ் சிறு வயதாக இருந்தாலும் நன்றாக பேசுகிறார்' - எ.வ.வேலு

``எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கடைகள் மூடப்பட்டிருக்கிறது என மாவட்ட நிர்வாகங்களுக்கே தெரியவில்லை. மதுவை நீங்கள் எப்படி குறைக்கப் போகிறீர்கள்? ஆண்டுக்கு இத்தனை கடைகளை மூடலாம் என எதுவும் திட்டம் இருக்கிறதா?

நேரு பிரதமராக இருந்த போது மதுக்கடைகளை மூட எல்லா மாநிலத்துக்கும் ஒரு கமிட்டியை அனுப்பினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் 'கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது' என்றனர். அதை இங்கே பதிவு செய்கிறேன்.

அமைச்சர் விக்னேஷ் சிறு வயதாக இருந்தாலும் நன்றாக பேசுகிறார். ஆனால், போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்."

``டாஸ்மாக்கில் என்னென்ன ஊழல் நடந்தது யார் யாருக்கு Party Fund சென்றது என விரிவாக அறிக்கை தயார் செய்து அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், அப்போதைய அரசு அதை வைத்து வழக்குப் பதிவு செய்யவில்லை."

- அமைச்சர் அருண்ராஜ்

டாஸ்மாக் குறித்த விவவாதம்!

``ஆன்லைனில் மது விற்பனை செய்யவில்லை. பணமில்லா பரிவர்த்தனைக்காக மட்டுமே ஆன்லைன் முறை கொண்டு வரப்படுகிறது. ஆன்லைனில் மது விற்பனை என்பது தவறான கருத்து."

- அமைச்சர் விக்னேஷ்

``மதுவை ஒரு வருமானமாக பார்க்கக்கூடாது. மதுவை ஒரு அரசே ஊக்குவிக்கக்கூடாது. மதுவினால் வருகிற வருமானத்தை பெருக்குகிறோம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு அரசு மதுவை ஒழிக்கும் முயற்சியிலேயே ஈடுபட வேண்டும்." - கணேஷ் குமார் பா.ம.க எம்..எல்.ஏ

அமைச்சர் விக்னேஷ் : ``கடந்த ஆட்சியில் இந்தியா முழுவதும் மதுவை தடை செய்தால்தான் தமிழகத்திலும் தடை செய்ய முடியும் என்றனர். நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்பமாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்."

முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன்! - வசந்தம் கார்த்திகேயன், திமுக எம்.எல்.ஏ

``மாணவர் பருவத்தில் முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். லவ் டுடே படத்தை 6 முறை பார்த்திருக்கிறேன். முதல்வர் மேடையில் பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசின் இந்த பட்ஜெட் ஜீரோ பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை."

அதிமுக சார்பில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ``கல்லறைக்குள்ளே இருந்தாலும் உலகத்தாரின் கவனத்தை இன்றைக்கும் ஈர்க்கும் ஏழைகளின் பிதாமகன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,

அதிமுகவின் பிதாமகள், தமிழ்கூறும் நல்லுலகின் ஒரே தலைவி புரட்சித் தலைவி,

இவர்களின் வழியில் இயக்கத்தின் பொதுச்செயலாளராக சட்டமன்ற சன்னிதானத்தில் புரட்சித் தலைவியின் ஒரே அரசியல் வாரிசான எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களை வணங்குகிறேன்.

கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் களம் கண்ட ஆற்றல் மிகுந்த படைவீரர்களே, சிகரத்தை செதுக்கும் சிங்கங்களே, காற்றோடு கைகுலுக்கும் கனல் நெருப்புகளே, மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடியாரின் விழுதுகளே உங்களுக்கும் என்னை வெல்ல வைத்த கலசப்பாக்கம் மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

வானவில்லிற்கு வளைகாப்பு நடத்தும் வசந்த காலத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து பேச வாய்ப்பு கொடுத்த எடப்பாடியாருக்கு நெஞ்சார்ந்த நன்றி." என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.!

``தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,28,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்."

ரகுபதி, திமுக : ``அப்பாவை காணோம் என பேசுகிறீர்களே...மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என திட்டங்களில் பலனடைந்த மக்களின் மனங்களில் எங்களின் தலைவர் வாழ்கிறார். அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறீர்கள். மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் எங்கள் ஆட்சியில் பயனடைந்தார்கள். இப்போது எல்லா திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என்றால் தலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். ஆக, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது." என்றார்'

நிதியமைச்சர் மரிய வில்சன்: ``மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,28,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்."

கே.என்.நேரு, திமுக : ``நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு நிதித்துறை செயலாளர் பேசினார். 50 ஆண்டுகள் ஆகினாலும் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது என்கிறார். நீங்கள் கூட ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள். நாங்கள் இதை குற்றமாக சொல்லவில்லை. ஒரு அரசு கடன் வாங்கிதான் செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதித்தால் மட்டுமே கடன் வாங்க முடியும். உரிய வருவாய் இருந்தால் மட்டுமே ரிசர்வ் வங்கி கடன் வாங்க அனுமதி கொடுக்கும். ஆக, எவ்வளவு கடன் வாங்கினோம் என்று பார்க்கக்கூடாது. எவ்வளவு திட்டங்களை அமல்படுத்தினோம் என்றே பார்க்க வேண்டும்." என்றார்.

``தொகுதி மறுவரையை பற்றி இந்தியாவுக்கே முன்னுதாரணமாக பேசியது திமுகதான். தென்னிந்திய முதல்வர்களை ஒன்றாக கூட்டி முதலில் குரல் கொடுத்தது எங்களின் தலைவர்தான். Delimitation தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டம் பற்றி எங்கள் தலைவர் ஆலோசித்து ஒரு முடிவை எடுப்பார்." - உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்வர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார்.!

``நிதிநிலை அறிக்கையில் கசிவு...கசிவு என புது வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது என்ன கசிவு?" - ரகுபதி

நிதியமைச்சர் மரிய வில்சன்: ``ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்திருக்கிறது என்பதை தணிக்கை செய்து வருகிறோம். மூன்று துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்வர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார். கடந்த முறை பார்ட்டி பண்ட் என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள். இனி அப்படி இருக்காது. எல்லாவற்றையும் தணிக்கை செய்து கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம்." என்றார்.

தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகள் ஏன் நிரப்பப்படவில்லை?

``நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவன் தேவன் என்கிற கொள்கையை கொண்டது திமுக. " - ரகுபதி திமுக எம்.எல்.ஏ

``தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் பதிலளிக்க ஆணையர்கள் இல்லை என்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம் எனக் கூறும் அரசு தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை நிரப்பாமல் இருப்பது ஏன்?" - ரகுபதி திமுக எம்.எல்.ஏ

``காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. மேகதாது அணை தொடர்பாக எந்த கட்டுமானப் பணியையும் தொடங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறோம். "

- நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்

கர்நாடகாவிடம் மண்டியிட வேண்டிய அவசியமில்லை!

``முதல்வர் நமக்கான உரிமையை கேட்க வேண்டும். கர்நாடகாவிடம் மண்டியிட வேண்டிய அவசியமில்லை. அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பேசி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்."

- கம்யூனின்ஸ்ட் எம்.எல்.ஏ செல்லசுவாமி

முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்!

``குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம். 'அரசியலே நாங்கதான்' என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்." - முதல்வர் விஜய்

``நீங்கள் கொடுத்த சிறப்பு தொகுப்பு நிதி எல்லா அரசிலும் கொடுப்பதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரண நிதி. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதை தெரிந்துகொள்ள பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூடி பேசினால்தான் இதெல்லாம் தெரியும்."

முதல்வருக்கு உதயநிதி பதில்!

`முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்' - முதல்வர் விஜய் தாக்கு

முதல்வர் விஜய், ``காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விஷயங்களை கேட்டிருக்கிறார்கள். காவிரி நம்முடைய உயிர் ஆதாரம். அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். ஜல்சக்தி துறை அமைச்சர் காவிரி பற்றி முழுமையாக குறிப்பிடாத போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினோம். தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

சட்டப்படி பிரச்னையை அணுக தயாராக இருக்கிறோம். ஆனாலும் ஒரு முறை முயன்று பார்க்கலாம் என்றுதான் கர்நாடகாவுடன் பேச நினைத்தேன். பகை நாடுகளே பேசும்போது பக்கத்து மாநிலங்கள் ஏன் பேசக்கூடாது என்றுதான் அந்த முயற்சியை எடுத்தேன். அதில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டார்கள்? அப்படி நேர்ந்தால் தமிழக மக்களுக்காக அதையும் தாங்கிக் கொள்கிறேன் என்றேன்." என்றார்.

மேலும், ``காவிரி நதி நீர் பங்கீட்டிலும் மேகதாது விவகாரத்திலும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு.

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டது குறித்து 1969 இல் சபையில் ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்ட விட்டீர்கள் என கேட்க விரும்பவில்லை. அந்த மலிவு அரசியலை நான் செய்ய விரும்பவில்லை.

அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் 'காவிரியில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும்' என்றார். ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது.

குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம். 'அரசியலே நாங்கதான்' என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்." என்றார்.

பயிர் கடன் பேச அனுமதி மறுப்பு.!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயிர் கடன் தள்ளுபடி பற்றி சட்டசபையில் பேச வேணடும் என்றார் அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் காவிரி விவகாரத்தை பற்றி மட்டும் பேசவும் என பயிர் கடன் தொடர்பான பேச அனுமதி மறுத்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நான் எதையும் தவறாக பேசவில்லை விவசாயிகள் பயிர் கடனுக்காகவும் தான் போராடி வருகிறார்கள் என குறிப்பிட்டார்!

``மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. இந்த அரசு ஒரு மாடலை பின்பற்றுகிறது. அதாவது, விஷயங்களை முதலில் இவர்களே கசிய விடுவார்கள். எதிர்ப்பு எழுந்தால் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுத்தது யார்? பின்னர் அந்தப் பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது?" - உதயநிதி

`மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன?'

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், " மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? மேகதாது அணைகட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாதது ஏன்? முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது? மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? " என கேள்வி எழுப்ப்பினார்.

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி எஸ். ஜானகி, இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்திற்கு பின்னர் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கேள்வி நேரம் முடிந்ததும் 2026 27 ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்டியல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். இந்த விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளிப்பார்கள்.