குதிரை பேர விவகாரம்
குதிரை பேர விவகாரம் - அதிமுக, தவெக இடையே வார்த்தை போர்
அவையில் தேவை இல்லாமல் சில வார்த்தைகளை சொல்லக் கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
Published : August 11, 2026 at 5:54 PM IST
சென்னை: குதிரை பேர செயல்களில் தவெக ஈடுபடக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் பேசியதை அடுத்து அதிமுக - தவெக இடையே வார்த்தை போர் மூண்டது.
வெற்றி பெற்று ராஜிநாமா செய்து பின் மீண்டும் உங்கள் கட்சியில் சேர்பவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது. குதிரை பேர செயல்களில் தமிழ்நாடு அரசு ஈடுபடக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசினார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "2017-க்கு பிறகு அதிமுக ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது ஜெயலலிதாவின் அதிமுக கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சி கிடையாது. ஜெயலலிதா இருந்த வரை நீட் கொண்டு வரவில்லை. சிஏஏ கொண்டு வரவில்லை. ஆனால் பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக டெல்லியில் சரண்டர் ஆனீர்கள். அதனால்தான் முதலமைச்சர் விஜய் நீர்த்துப்போன ஆட்சி என்று உங்களை சொன்னார்.
உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் சேர வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக தலைமை மீது தொண்டர்களுக்கு இருந்த நம்பிக்கை முழுவதுமாக விலகியதால் தான் எம்ஜிஆரின் விசுவாசிகளும், ஜெயலலிதாவின் விசுவாசிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இதை குதிரை பேரம் என்று சொல்வது தவறு. ராஜிநாமா செய்ய சட்டப்படி அனைவருக்கும் உரிமை உள்ளது. அவையில் மாற்றுக் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்வது இயல்பு. அவையில் தேவை இல்லாமல் சில வார்த்தைகளை சொல்லக் கூடாது" என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "எடப்பாடி பழனிசாமி பேசுகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார். மின்சார கட்டணம் எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. தாமாக முன்வந்து ராஜிநாமா செய்து எங்கள் கட்சியில் சேர்ந்து உள்ளார்கள். இதில் எந்த கூவத்தூர் நிகழ்வும் நடைபெறவில்லை" இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "45 நிமிடம் அவருக்கு தெரிந்த கருத்துக்களை, அவருடைய ஆட்சியின் சாதனைகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், அவர் கடைசியாக சொன்ன சில செய்திகள் ஆளும் கட்சியினர் பேசுவதற்கு வழி வகுத்துள்ளது. திமுக, அதிமுக இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்கு தெரியும். பேசாமல் அமருங்கள்" என்றார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, "குதிரை பேர விவகாரத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து உள்ளது. நாங்கள் நடுநிலையாக நடந்து கொண்டுள்ளோம். அதுதான் எங்களது பாதுகாப்பு" என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், "40 நிமிடம் எடப்பாடி பழனிசாமி பேசும் போது எதிர் கருத்துக்கள் இருந்தாலும் கூட அவருடைய கருத்துக்களை கேட்டோம். ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான கருத்தை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இரவு, பகல் பாராமல் வேர்வையை சிந்தி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தோம். நான் கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில், எனது உத்தரவுக்கு இணங்க தொண்டர்களின் உழைப்பில் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனால் தான் கருத்தை சொல்ல வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். நாங்களும், திமுகவும் எந்த காலத்திலும் ஒன்றாக சேர்ந்ததில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு செயல்படுகிறோம் என சபாநாயகர் கூறுவது தவறு" என பதிலளித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர், "நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறீர்கள் என்று சொன்னதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. உள் நோக்கமும் கிடையாது" என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பேரவைக்கு புறம்பான வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.