லீடர்ஷிப் பிரச்னை.. விஜய்யை சொன்னாரா விஜய் சேதுபதி?.. ஆதரவாக களம் கண்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்துவருகிறது. நேற்று விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது அவர் போட்டியாளர் ஷாத்திகாவிடம் லீடர்ஷிப் குறித்து பேசிய கருத்து விஜய்யைத்தான் குறிப்பிட்டிருப்பதாக விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாம் சேதுவை அட்டாக் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தவெகவை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு முதல் கரும்புள்ளியாக விழுந்தது என்றால் கரூர் துயர சம்பவம். தன்னை காண வந்தவர்களில் 40க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை விட்டார்கள். இவரோ சம்பவ இடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட பிறகும்; அங்கேயும் நிற்காமல், அருகே இருக்கும்கூட திருச்சியில்கூட தங்காமல், செய்தியாளர்களையும் சந்திக்காமல் விமானம் ஏறி சென்னை சென்று பிறகு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் ஆன பின்பும்: அப்போதைய திமுக அரசு இவ்விவகாரத்தில் விஜய் மீது முதல் தகவல் அறிக்கையைகூட பதிவு செய்யவில்லை. இருப்பினும் விஜய், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சில நாட்கள் எங்கே இருந்தார்கள் என்றுகூட தெரியவில்லை. இப்போது முதலமைச்சராகிவிட்டார் விஜய். அவர் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட கரூர் விஷயத்தில் யார் பக்கம் தவறு என்பதை கண்டுபிடிக்கவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இப்போதும் அப்படித்தான்: சி.எம் ஆன பிறகு ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்வார் என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. மேலும் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றாகவும், ரிசல்ட்டுக்கு பின்பு அது வேறு ஒன்றாகவும் மாறியிருப்பதையும் வேதனையுடன் பார்க்கிறார்கள் மக்கள். அதுமட்டுமின்றி திமுக மீது பழி போடுவதையும் அவர் இன்னமும் நிறுத்தவில்லை. சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
விஜய்யை சொன்னாரா?: அவர் ஷாத்திகாவிடம் நேற்று பேசுகையில், "லீடர்னா என்னவென்று தெரியாமல் லீடர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாமல்; வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு; பிரச்னையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல் பழியை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதெல்லாம் ஏமாற்று வேலை; என்றார். இதில் அவர் விஜய் என்ற பெயரையோ, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றோ சொல்லவில்லை.
இருப்பினும் விஜய்யின் ரசிகர்களோ, விஜய் சேதுபதி விஜய்யைத்தான் சொல்லியிருக்கிறார். இவர் திமுகவின் கைகூலி; அந்த ஆட்சியில் எதையும் சொல்லாமல் அமைதி காத்துவிட்டு; இப்போது ஏன் கருத்து சொல்கிறார் என்றெல்லாம் பேசிவாருகிறார்கள். விஜய் என்ற பெயரையே சேது உச்சரிக்காதபோது விர்ச்சுவல் வாரியர்ஸ் ஏன் வண்டியில் ஏறுகிறார்கள் என்று தெரியவில்லை.
ப்ளூ சட்டை மாறன் சப்போர்ட்: விஜய் சேதுபதியை விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லை மீறி விமர்சிப்பது அதிகரித்திருக்கும் சூழலில்; பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் எக்ஸ் பக்கத்தில், "Bold speech by Vijaya Sethupathi. அதிமுக மற்றும் பாஜகவையும் சேர்த்து பேச தைரியம் இல்லை. திமுகவை மட்டும் நொட்டை சொல்லியே இந்த ஆட்சியின் குறைகளை மூடி மறைத்து விடுவார்கள்" என தெரிவித்திருக்கிறார்.