📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 27, 2026 02:33 AM

'லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்': வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!

'லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்': வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தியுமான 'கயல்விழி அழகிரி', வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்ததாக அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி அறையில் நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டட வாடகை ஒப்பந்தம்:

சென்னை அடையாறு பகுதியில் கயல்விழி அழகிரிக்குச் சொந்தமான வணிகக் கட்டடத்தில் வங்கியின் வெளிநாடு வாழ் இந்தியர் கிளை இயங்கி வருகிறது. வங்கியின் கட்டடத்தில் இயங்கி வந்த மின்தூக்கி பழுதானதால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டடப் பராமரிப்பாளரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

பராமரிப்பாளர் தரப்பிலிருந்து தகுந்த பதில் வராததால், மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு லிப்ட் பழுது குறித்துத் தெரிவித்துள்ளார்.

சிசிடிவியில் பதிவான தாக்குதல் சம்பவம்:

தனக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, கடந்த 20ம் தேதி அடையாறில் உள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்றுள்ளார். மேலாளர் அறையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கயல்விழி, ஆத்திரமடைந்து மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் முழுவதும் வங்கியின் பாதுகாப்பு சிசிடிவி கேமராவில் பதிவானது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

காவல்நிலையத்தில் புகார் & வழக்குப் பதிவு:

சம்பவம் குறித்து வங்கி மேலாளர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, சிசிடிவி ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம், அடையாறு காவல் நிலையத்தில் கயல்விழி அழகிரிக்கு எதிராக முறைப்படி புகார் அளித்தார்.

புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கயல்விழி அழகிரி மீது அடையாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.