மாநிலங்களவை தேர்தல்: முதல்
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வின் மாநி லங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி.சண்முகம்மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.எல். ஏ.வாக பதவி ஏற்கும் முன்பு, சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது எம்.பி. பதவி காலம் முடிவதற்கு இன்னும் 2½ ஆண்டு உள்ளது. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதால், தமிழகத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை ஒரு உறுப்பினர் பதவியிடம் காலியானது. இதனிடையே சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வென்றது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு போதிய இடங்கள் இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவை வழங்கியது.
அதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்த 2 கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் த.வெ.க.வுக்கு ஆதரவளித்தன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 8-ந் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ந் தேதி நடக்கிறது.
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 11-ந் தேதி யாகும். ஜூன் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவியை காங்கிரசுக்கு த.வெ.க. ஒதுக்கீடு செய்தது. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரவீன் சக்கரவர்த்தி கூறுகையில், “முதல்-அமைச்சர் விஜய் பெருந்தன்மை, கருணை மூலம் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு அவருக்கு நன்றி. தவெக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ராஜ்யசபாக்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார்.