📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 30, 2026 08:02 PM

மாற்று விநியோக மையமாகச் சிங்கப்பூர் திகழலாம்: அமைச்சர் கிரேஸ் ஃபூ

மாற்று விநியோக மையமாகச் சிங்கப்பூர் திகழலாம்: அமைச்சர் கிரேஸ் ஃபூ

உலகின் பல்வேறு நாடுகளும் அவற்றின் விநியோகக் கட்டமைப்பைப் பன்முகப்படுத்த முயன்றுவரும் வேளையில், அனைத்துலக நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் ஒரு மாற்று விநியோக மையமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ புதன்கிழமையன்று (செப்டம்பர் 30) தெரிவித்தார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் இருவழிப் பாதையாக அமைந்துள்ளதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார். எளிதான சந்தையாக இல்லாவிட்டாலும், சிங்கப்பூர் நிறுவனங்கள் தென்னமெரிக்காவிலிருந்து புதிய உணவு ஆதாரங்களைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவர் சுட்டினார்.

வர்த்தக நிறுவனங்களும் நாடுகளும் அவற்றின் பொருளியல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து ‘சரியான நேரத்திற்குள்’ என்ற அணுகுமுறையிலிருந்து 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்ற அணுகுமுறைக்கு மாறி வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரின் புதிய உணவு ஆதாரத் தேடல், தென்னமெரிக்க விநியோக நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்று அமைச்சர் ஃபூ கூறினார்.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் சிங்கப்பூர் சில சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே, சிங்கப்பூர் வழியே வர்த்தகம் செய்வதும் ஆதாரங்களைப் பெறுவதும் மற்ற நாடுகளுக்குப் பயனளிக்கும் வகையில், அது தன் விதிகளையும் நடைமுறைகளையும் சுமுகமானதாகவும் குறைந்த செலவுடையதாகவும் மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சந்தைகள், விதிமுறைகள், பொருள்களின் பரிவர்த்தனைப் போக்குகள் மாறிவருவதால், உள்ளூர் வர்த்தகங்கள் அவற்றின் பழைய நிலையிலேயே தொடர்ந்து இருந்துவிடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பும் வர்த்தகச் சங்கங்களும் ஏற்பாடு செய்யும் வெளிநாட்டு வர்த்தகப் பயணங்களில் உள்ளூர் நிறுவனங்கள் இணைய வேண்டும் என்றும் அரசாங்க மானியங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அனைத்துலக வர்த்தகச் செலவைக் குறைக்கச் சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளைத் துணைக்குக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஃபூ ஊக்குவித்தார்.