📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 06:03 PM

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த கோரி முற்றுகை போராட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த கோரி முற்றுகை போராட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த கோரி முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Published : September 7, 2026 at 5:17 PM IST

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி, சென்னையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தின் முன்பு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்று சக்கர வாகனத்திலும், சக்கர நாற்காலிகளிலும் மாற்றுத் திறனாளிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு தாழ்தள பேருந்துகள் வரவில்லை. இதனால், அவர்கள் கைது செய்யப்படும் போது சாதாரண பேருந்தில் ஏற மறுத்தனர். பின்னர் தாழ்தள பேருந்து வரவைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக அரசுக்கு எதிராகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, "தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியிலும் போராட்டம் நடத்தினோம் . திமுக ஆட்சியின் போதும் போராடிய எங்களை கைது செய்தனர். ஆனால் எங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தரவில்லை. திமுக ஆட்சியின் போது நாங்கள் கைது செய்யப்பட்ட வீடியோவை தவெகவினர் பார்த்து இருப்பார்கள். புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதே போல தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை விண்ணப்பித்தவர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கு நிதி இல்லை என கூறும் போது, முதலமைச்சரின் தற்காலிக அலுவலகம் அமைப்பதற்கும், மேட்டுரில் தண்ணீர் திறந்து விட சென்றதற்கான பாதுகாப்பிற்கும் நிதி இருக்கிறதா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கித் தருவதற்கும், புதிய தலைமைச் செயலகம் கட்டித் தருவதற்கும் நிதி இருக்கிறதா? என காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும் உதவித்தொகையை தவெக அரசு உயர்த்தி வழங்காவிட்டால் அடுத்தக் கட்டமாக கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம்" என்று தெரிவித்தார்.