Madurantakam, Dharapuram Bypoll News In Tamil Live Updates: தாராபுரம் இடைத்தேர்தல்; நாளை ஸ்டாலின் பரப்புரை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி, அனல் பறக்கும் பிரச்சாரத்துடன் தீவிரமடைந்துள்ளது. வாக்குப்பதிவு 2026 அக்டோபர் 6 (செவ்வாய்க்கிழமை) அன்றும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் 2026 அக்டோபர் 9 (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெறவுள்ளன. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் ஐ. பரந்தாமன், அதிமுக சார்பில் எஸ். கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் கே. ஜானகிராமன் மற்றும் இடதுசாரி (CPM) சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல தாராபுரம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் பி. சத்தியபாமா, திமுக சார்பில் எஸ். சுகன்யா, அதிமுக சார்பில் கே. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் எம். கார்த்திகா மற்றும் இடதுசாரி (CPI) சார்பில் லட்சுமணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களுடன் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாகத் தேர்தல் களத்தில் களம் கண்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், ஆளுங்கட்சியான தவெக தனது சாதனைகளையும் நலத்திட்டங்களையும் முன்வைத்தும், எதிர்க்கட்சியான திமுக அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அதிமுக தங்களை விட்டு விலகியவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்ற தீவிர முழக்கத்துடனும் வாக்கு சேகரிக்கின்றன. நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இறுதியில் இரு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை அக்டோபர் 9 வாக்கு எண்ணிக்கையின் போதே மக்கள் தீர்ப்பு உறுதி செய்யும்.
த.வெ.க ஆதரவுடன் இ.பி.எஸ்-ஐ முதல்வராக்க முயன்றோம் - டி.டி.வி தினகரன்
107 தொகுதிகளுடன் விஜய்யால் ஆட்சியமைக்க முடியாது என்பதால், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கேட்கலாம் என்றுதான் இருந்தோம். மே 8-லேயே இதை செய்தியாளர் சந்திப்பில் கூறினேன். தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல். த.வெ.க ஆதரவுடன் கூட்டணித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயன்றோம். உடன்பாடு இல்லாததால் திருமாவளவனை முதல்வராக்க முயன்றோம். இதில் தி.மு.க, பா.ஜ.க.,வின் பின்னணி எதுவும் இல்லை என மதுராந்தகத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆதவுக்கு கடைசி எச்சரிக்கை; தாராபுரத்தில் பிரேமலதா ஆவேசம்
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். கேப்டனை நேரில் பார்க்காதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேசக்கூடாது. அதற்கான அருகதை யாருக்கும் இல்லை. தம்பி ஆதவ் அர்ஜூனா இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தாராபுரம் இடைத்தேர்தல்; நாளை ஸ்டாலின் பரப்புரை
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். அமராவதி சிலையில் இருந்து ரோட் ஷோ மூலம் ஆதரவு திரட்டும் ஸ்டாலின், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
த.வெ.க எம்.எல்.ஏ முடி திருத்தம் செய்து பிரச்சாரம்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சலூனில் நோட்டீஸ் கொடுத்தும், முடி திருத்தம் செய்தும் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
மதுராந்தகம் முழுவதும் ரோடு ஷோ; 39 இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களை சந்திக்கும் விஜய்
இடைத்தேர்தல் பரப்புரைக்காக முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி முழுவதும் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார். அப்போது மாமண்டூர் முதல் மாம்பாக்கம் வரை 39 முக்கிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களை சந்திக்கிறார். முதல்வர் விஜய்யின் ரோட் ஷோவிற்கு 10 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
மதுராந்தகத்தில் த.வெ.க வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை
மதுராந்தகத்தில் இன்று த.வெ.க வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்கின்றனர். பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்
ஆதிபாரசக்தி கோவிலில் வழிப்பட்டு ரோட் ஷோ தொடங்கும் விஜய்
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக முதல்வர் விஜய் நாளை (அக்டோபர் 2) 45 கி.மீட்டருக்கு ரோட் ஷோ செல்லவிருக்கிறார். இந்தநிலையில், மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி கோவிலில் வழிப்பட்டு இந்த ரோட் ஷோவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரோட் ஷோவுக்காக 5 கி.மீட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ ஏற்பாடுகளை செய்ய த.வெ.க தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
"தவெக வேட்பாளர் நாடகம் ஆடுகிறார்" - தமிமுன் அன்சாரி விமர்சனம்
"தவேக வேட்பாளர் சத்திய பாமா செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் விரட்டி அடிப்பதால் முதலமைச்சரின் மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகிறார். தாராபுரம் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி தவேகவின் குதிரை பெற அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும்" என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ், சக்கரபாணி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சக்கரபாணி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ
'தூய சக்தி... வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம்' -சண்முகம்
“இடைத்தேர்தலில் தவெகவே ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். 'தூய சக்தி... வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம்' என முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இது குறித்து சம்மந்தப்பட்ட தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்” என சிபிஎம் சண்முகம் தெரிவித்துள்ளார்.
"பாமகவுடன் கூட்டணியே கிடையாது" - உறுதியளித்த அமைச்சர் வன்னிஅரசு
“10 ஆண்டுகளுக்கு மேலாக, சாதியவாத பாமக, மதவாத பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளிப்படையாக விசிக தெரிவித்துள்ளது. அது தான் எங்களின் நிலைப்பாடு, அந்த நிலைப்பாட்டில் தொடர்வோம், உறுதியாக இருப்போம். வதந்தி என சௌமியா அன்புமணியும் கூறிவிட்டார், வதந்திக்கு நான் பதில் சொல்லமாட்டேன்” என தவெக அரசில் பாமகவுக்கு அமைச்சர் பதவி தரப்போவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அமைச்சர் வன்னிஅரசு பதில் அளித்துள்ளார்.
த.வெ.க -வுக்கு பாடம் புகட்டுவார்கள் - அன்பில் மகேஷ்
"தாராபுரம் தொகுதி மக்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?' என திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். த.வெ.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
"என் தாயின் மீது சத்தியமாக அப்படி கூறவில்லை..." - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
"அருண்ராஜ் பேசும் போதே நேரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கூறினார்கள்; அது போல தான் சத்தியபாமா பேசும் போது என்னிடம் கூறினார்கள். என் தாயின் மீது சத்தியமாக கூறுகிறேன், அப்படி நான் கூறவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த குற்றச்சாட்டை வைக்கின்றனர். வெயிலில் மக்கள் காத்திருந்ததால், சீக்கிரம் முடிக்குமாறு தான் கூறினேன்" என அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார்.
சத்யபாமா அழுகையும் விஜய் தேற்றியதும் நடிப்பு - கனிமொழி
தாராபுரத்தில், தவெக வேட்பாளர் சத்யபாமா அழுததும், அவரை முதலமைச்சர் தேற்றியதும் நாடகம் என தாராபுரத்தில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.
தவெக கூட்டணியில் பாமக -ராஜ் மோகன் பதில்
தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்த கேள்விக்கு "கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முதலமைச்சர் முடிவு செய்வார்" என அமைச்சர் ராஜ் மோகன் பதில் அளித்துள்ளார்.
சத்தியபாமாவிடம் கூறியது என்ன?: அமைச்சர் ராஜமோகன் விளக்கம்
விரைவாக பேசி முடிக்க வேண்டும் என தவெக வேட்பாளர் சத்தியபாமாவிடம் கூறினேன். மக்கள் வெகுநேரமாக காத்திருப்பதால் விரைவாக பேச வேண்டும் என கூறினேன்; அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள் என சத்தியபாமாவின் காதில் அமைச்சர் ராஜமோகன் பேசியது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் வைரலாகும் வீடியோ - ராஜ்மோகன் விளக்கம்
“என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன்... முதலமைச்சர் நிற்கிறார், மக்கள் நிற்கிறார்கள் சீக்கிரம் நிகழ்ச்சியை முடியுங்கள் என்று நிகழ்ச்சி ஒருணக்கிணைப்பாளர்கள் சொன்னார்கள்” என தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் வைரலாகும் வீடியோ குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
திருமாவை முதல்வராக்க முயன்றோம் - மதுராந்தகத்தில் டிடிவி.தினகரன் பேட்டி
திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேசியதாகக் கூறுவது தவறு. அதிமுக ஆட்சி அமைக்க, இன்றைய முதல்வர் விஜய்யிடம் தான் ஆதரவு கேட்கலாம் என்று இருந்தோம். அது முடியாமல் போனதால் தான் திருமாவளவனை முதல்வராக்க அதிமுக உட்பட அனைத்து கட்சியினரும் முயன்றோம் என மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை