மைசூரு தசரா ஜம்பு சவாரி: தங்க அம்பாரியை சுமக்கவுள்ள பிரசாந்த் யானை!
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை 54 வயதான பிரசாந்த் யானை சுமந்து செல்லவுள்ளது. இதுவரை தங்க அம்பாரியை சுமந்து வந்த அபிமன்யு யானைக்குப் பதிலாக பிரசாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ள ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் பொறுப்பு பிரசாந்த் யானைக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுபவம், உடல் தகுதி, அமைதியான குணம் மற்றும் இந்தப் பணிக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றுள்ளது.
18 ஆண்டுகால அனுபவம்: பிரசாந்த் யானை தசரா விழாவில் பங்கேற்பதில் சுமார் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. தங்க அம்பாரியை சுமந்து செல்வதற்கான யானையைத் தேர்வு செய்யும்போது உடல் வலிமை, எடையைச் சுமக்கும் திறன், உடலமைப்பு, நடைப்பயிற்சியில் நிலைத்தன்மை, சகிப்புத்தன்மை, குணநலன் மற்றும் பயிற்சியின்போது வெளிப்படுத்திய செயல்திறன் உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் பிரசாந்த் யானை இந்தப் பெருமைக்குரிய பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
புதிய பொறுப்புகளில் மற்ற யானைகள்: கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்க அம்பாரியைச் சுமந்து வந்த அபிமன்யு யானை, இந்த ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று, நிஷானே யானையாகப் பங்கேற்கவுள்ளது. தங்க அம்பாரியைச் சுமக்கும் யானைக்கான மாற்றுத் தேர்வாக தனஞ்செயா யானையும், நவுபட் யானையாக கோபி யானையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பூ சவாரியில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்துச் செல்வதும், தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனின் திருவுருவத்தைத் தரிசிப்பதும் ஆண்டுதோறும் ஏராளமான மக்களைக் கவரும் நிகழ்வாகும். இந்த ஆண்டு பிரசாந்த் யானை தங்க அம்பாரியைச் சுமந்து செல்லவுள்ளதால், மைசூரு தசரா விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜயவாடா: திரௌபதி முர்மு, ஆந்திரப் பிரதேச மாநிலம் ...
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ ...
சென்னை: சென்னை லோக் பவனில் நடைபெற்ற நவராத்திரி கொலு ...
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை ...
பாலக்காடு: பாலக்காடு, மேலாமுறி பெரியமாரியம்மன் ...
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி ...