மேகதாது அணை... கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் போட்ட பிரேக்!
மேகதாது அணை... கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் போட்ட பிரேக்!
- சதீஷ் லெட்சுமணன்
"மேகதாது அணை என்பது பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கான திட்டம் மட்டுமே” என்று பல ஆண்டுகளாகக் கூறிவந்த கர்நாடக அரசுக்கு, தற்போது மத்திய நீர்வள ஆணையம் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கர்நாடக அரசு சமர்ப்பித்திருந்த மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) அந்த ஆணையம் திருப்பி அனுப்பியிருக்கிறது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை கர்நாடகாவுக்கு ஒதுக்கியிருக்கும் நீரின் அளவைத் தாண்டி, கூடுதல் நீரைப் பயன்படுத்தும் வகையில் திட்டம் மாற்றப்பட்டிருப்பதால், தற்போதைய வடிவில் அதைப் பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
மேகதாது அணைத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு 2018-ல் சமர்ப்பித்தது. அதை ஆய்வுசெய்த மத்திய நீர்வள ஆணையம், சில நிபந்தனைகளுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் வழங்கியது. அதன்படி தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை 2019-ல் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைத்தான் தமிழக அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக, சட்டரீதியாக எதிர்த்துவருகிறது.
இந்த நிலையில் 2026, ஏப்ரல் 21-ம் தேதி கர்நாடக அரசு அனுப்பிய கடிதத்தில் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. ஆரம்பத்தில் `பெங்களூரு குடிநீருக்காக 4.75 டி.எம்.சி நீர் பயன்படுத்தப்படும்’ என்று கூறப்பட்ட நிலையில், அதை 6.95 டி.எம்.சி-யாக உயர்த்தியிருக்கிறது. அதோடு, காவிரியின் குறுக்கே ஒரு சிறு தடுப்பணையை அமைத்து, ‘சிவனசமுத்திரா’ புனல்மின் திட்டத்தையும் இணைத்திருக்கிறது. இதன் மூலம், முதலில் ஒப்புதல் பெற்ற திட்டத்தின் அடிப்படை நோக்கமே மாற்றப்பட்டிருப்பதாக ஆணையம் கருதியிருக்கிறது.
2044-ம் ஆண்டில் பெங்களூரின் குடிநீர்த் தேவை 64 டி.எம்.சி-யாக உயரும் என்பதால், 60 டி.எம்.சி கொள்ளளவுகொண்ட அணை தேவை என, கர்நாடக அரசு கணித்திருக்கிறது. ஆனால், 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ‘கர்நாடகாவின் மொத்தக் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத் தேவை 33 டி.எம்.சி. அதில் பெங்களூருக்கான தேவை 24 டி.எம்.சி’ என ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அப்படியிருக்க, 60 டி.எம்.சி கொள்ளளவுக்கு என்ன ஆதாரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், ‘தற்போது பெங்களூரு நகருக்கும், பிற குடிநீர் திட்டங்களுக்கும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முழுமையான தரவுகளை கர்நாடக அரசு சமர்ப்பிக்கவில்லை. 6.5 டி.எம்.சி மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 6.95 டி.எம்.சி பயன்படுத்தத் திட்டமிடுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய மத்திய நீர்வள ஆணையம், 2019-ல் கர்நாடக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க திட்டத்தைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.
“மேகதாது அணை என்பது குடிநீருக்காக அல்ல; தமிழகத்துக்குச் செல்லவேண்டிய காவிரி நீரைக் கட்டுப்படுத்தும் திட்டம்” என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளிலிருந்து வெளியேறும் நீரையும், பிலிகுண்டுலுவுக்குக் கீழே உருவாகும் நீரையும் தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த அணை கட்டப்படுகிறது என்பதும் தமிழகத்தின் குற்றச்சாட்டு. தற்போது, ஒதுக்கீட்டைத் தாண்டி கூடுதல் நீரைப் பயன்படுத்தும் வகையில் திட்டம் மாற்றப்பட்டிருப்பதை ஆணையமே சுட்டிக்காட்டியிருப்பது, தமிழகத்தின் இந்த வாதத்துக்கு புதிய வலிமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில்தான், மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “சட்டபூர்வமாகப் பெற்ற உரிமைகளைப் பேச்சுவார்த்தையால் பலவீனப்படுத்தக் கூடாது; அது நீதிமன்றத்தில் தமிழகத்தின் நிலையை பாதிக்கும். இதனால்தான், கடந்தகாலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டபோதெல்லாம், தி.மு.க அதை உறுதியாக நிராகரித்தது” என்று அவர் கூறியிருக்கிறார். விவசாய அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில், `முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்?’ என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. மத்திய நீர்வள ஆணையமே கர்நாடகாவின் திட்டத்தில் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தையைத் தேர்வுசெய்வாரா... அல்லது அந்த அதிகாரபூர்வ ஆவணத்தையே சட்ட ஆயுதமாக்கி, தமிழகத்தின் நீர் உரிமையை மேலும் வலுப்படுத்துவாரா... தமிழக அரசின் அடுத்த நகர்வே மேகதாது விவகாரத்தின் போக்கைத் தீர்மானிக்கப்போகிறது!