📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 15, 2026 02:32 PM

“மேகதாது அணை கட்ட பூர்வாங்கப் பணிகளை கர்நாடகம் தொடங்கிவிட்டது!”

“மேகதாது அணை கட்ட பூர்வாங்கப் பணிகளை கர்நாடகம் தொடங்கிவிட்டது!”

“மேகதாது அணை கட்ட பூர்வாங்கப் பணிகளை கர்நாடகம் தொடங்கிவிட்டது!”

- தமிழக விவசாயிகள் அதிர்ச்சித் தகவல்

மேகதாதுவில் அணை கட்டுவதை, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்துவரும் நிலையில் அதற்கான பூர்வாங்கப் பணிகளை, கர்நாடக அரசு தொடங்கிவிட்டது” என `பகீர்’ கிளப்புகிறார்கள் தமிழக விவசாய சங்கத்தினர்!

மேகதாது பகுதிக்கு விவசாய சங்கப் பிரமுகர்களுடன் சென்று திரும்பி வந்திருக்கும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் இது தொடர்பாகப் பேசினோம். “இங்கே நாம் எதிர்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதைப் பொருட்படுத்தாமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான பூர்வாங்க வேலைகளைத் தொடங்கிவிட்டது. கனகபுரா - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10 கிலோமீட்டர் கீழ் நோக்கி 1,000 அடி ஆழத்தில் ஆர்காவதி ஆறும், காவிரி ஆறும் சங்கமமாகும் இடம் சுற்றுலாத்தலமாக இருக்கிறது. இந்தச் சங்கமத்திலிருந்து தமிழகத்தை நோக்கி காவிரி ஆறு ஓடத் தொடங்குகிற 3-வது கிலோமீட்டரில் மேகதாது அமைந்திருக்கிறது.

இங்குள்ள இரு மலைக்குன்றுகளுக்கு இடையே காவிரி நுழைகிற இடத்தில்தான் அணை கட்டத் திட்டமிடப்பட்டு, தரைமட்டத்தில் அதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு, கருங்கல் பாறையில் இரும்புக்கம்பிகள் நடப்பட்டிருக்கின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், யானைகள், புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும் பொதுமக்கள் செல்ல முன்பு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது விலக்கப்பட்டிருக்கிறது. அணை கட்டப்படவிருப்பதை நியாயப்படுத்துவதற்காக, சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். ஆர்காவதி - காவிரி சங்கமத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்படுகிறார்கள்.

மேகதாது கரையிலிருந்து 150 அடி ஆழமுள்ள ஆற்றின் அடிமட்டத்துக்குச் சுற்றுலாப்பயணிகள் இறங்கிச் செல்ல புதிதாகப் படிக்கட்டுகள் அமைத்திருக்கின்றனர். இதன் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தயாராகிவருவது தெரிகிறது” என்றவரிடம், “இதைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்றோம். “சட்டவிரோதமாக அணை கட்டத் தயாராகிவரும் கர்நாடக அரசை மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை, வனத்துறை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டும். 2018-ம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததால் அப்போது முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, மேகதாது அணைக்கான வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கினார்.

பின்பு, தங்களுக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி அந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைத்தது. காவிரியால் பயன்பெறும் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் கடும் எதிர்ப்பால் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர், வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பினார். ஆனால், அதை, கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்பாமலும், நிராகரிக்காமலும் இன்றுவரை மத்திய நீர்வளத்துறை ஆணையம் நிலுவையில் வைத்திருக்கிறது.

மேகதாது அணைக்கு எதிராகத் தமிழகம் தொடர்ந்த வழக்குகளை 2025, நவம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், ஒரு மாநிலம் தனக்குத் தேவையான திட்டத்தைச் செயல்படுத்த உரிமை இருக்கிறது. அதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்றும் கர்நாடக முதல்வர் சிவக்குமார் சட்டத்தைத் திரித்துக் கூறி மத்திய நீர்வள ஆணையத் தலைவரையும், மத்திய ஜல்சக்திதுறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி கேட்டிருக்கிறார்.

இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்். தமிழக அரசு, உடனே கர்நாடக முதல்வர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர வேண்டும். இந்தச் சிக்கலான சூழ்நிலையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்டுக்கொண்டதற்காக புதிய நடுவர் மன்றம் குறித்து இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட வாசகத்தை நிராகரித்து, தீர்மானத்தை திரும்பப் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போதும் அலட்சியமாக இல்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து, தமிழகத்தின் உரிமையையும் நிலைப்பாட்டையும் மத்திய அரசிடம் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி அமைப்பதால் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்குத் துணை போகும் காங்கிரஸ், பா.ஜ.க-வைக் கண்டிக்கிறோம். மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைப் பாதுகாப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களைக்கொண்டு பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்குழு ஏற்படுத்த வேண்டும். மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான சென்சிட்டிவ் பிரச்னை. மாநில உரிமை மற்றும் மக்கள் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. இதில் தமிழகத்தின் உரிமையை எந்த இடத்திலும் த.வெ.க அரசு விட்டுக் கொடுக்காது. நீதிமன்றத்தின் வாயிலாக, தமிழக உரிமை நிலைநாட்டப்படும். அதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன’’ என்றனர்.

மேகதாது பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில் என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?