மேகதாது அணை: தமிழகம் கவலைக்கு மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அண்டை மாநிலங்களிலும் கர்நாடக அரசு ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சு இத்தகவலைப் பதிவு செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி எம்.பி. மத்திய ஜல்சக்தி அமைச்சிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழகம், கேரளா, புதுவை ஆகிய அண்டை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடக அரசு பெறவேண்டுமெனக் கடந்த 2018ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்ப்பு விவரம் மத்திய அரசுக்குத் தெரியுமா? மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா? என்ற துணைக் கேள்விகளையும் திரு அன்புமணி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் ராஜ்பூஷண் சௌத்ரி மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள தனது அண்டை மாநிலங்களுடன் கர்நாடகா ஒப்புதல் பெறவேண்டுமென உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரி நீரை அந்தந்த மாநிலத்தில் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் பலனை அனுபவிக்கவும் திட்டங்களை நிறைவேற்றவும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை எனத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜ்பூஷண் சௌத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேகதாது அணையைப் பொறுத்தவரை அதற்கான திட்ட அறிக்கை தமது அமைச்சிடம் அளிக்கப்பட்டது என்றும் அதுகுறித்த விரிவான அறிக்கையைத் தீர்ப்பாய ஒப்புதலோடு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.