📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 03, 2026 07:33 PM

மேலூர் அருகே 2 கார்கள் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மேலூர் அருகே 2 கார்கள் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே மதுரை நோக்கி வந்த கார் எதிர் திசைக்கு சென்று விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், ராஜ மேரி, ரஞ்சனா உள்ளிட்ட 6 பேர் ஒரே காரில் கோவில்பட்டியில் நடக்கும் விசேஷம் ஒன்றுக்காக வந்து கொண்டிருந்தனர்.

இன்று (ஆக.3) அதிகாலை மேலூர் அருகே தும்பை பட்டி மேம்பாலத்தில் வந்தபோது காருக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் அந்தக் கார் மோதி, சாலையின் தாழ்வான தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசைக்கு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதியதில் இரண்டு கார்களும் சுக்கு நூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிய ஸ்ரீராம், அதில் பயணித்த ராஜமேரி, ரஞ்சனா மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றொரு கார் ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மேலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களும் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு கொட்டாம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் பேருந்துகள் நேருக்கு, நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலூர் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.