📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 15, 2026 01:33 PM

மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவூதி அரேபியா எச்சரிக்கை

மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவூதி அரேபியா எச்சரிக்கை

ஏமன் அரசு படைக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்து முகாமில் தங்கியுள்ள குடும்பம்

ரியாத்: ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுடன் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல் மண்டப் நீரிணைப் பகுதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் கைப்பற்றினர்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், பாப் அல் மண்டப் நீரிணைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது ஏமன் அரசுப் படைகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அதன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது.

தெற்கு சவுதி அரேபியாவின் காமிஸ் முஷைட் பகுதியில் உள்ள கிங் காலித் விமானப்படைத் தளத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டஜன் கணக்கில பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தினர்.

தினமும் பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றப்படும் சவுதி அரேபியாவின் முக்கிய செங்கடல் எண்ணெய் துறைமுகமான யான்பு உட்பட ஆறு நகரங்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை இன்று (செப். 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “யான்பு, ஜெத்தா, அப்கா, ஜசான், அல் உலா, தாயிப் ஆகிய பகுதிகளில் ஆபத்து ஏதும் இல்லை. ஆபத்து நீங்கிவிட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சிக்கன நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த பாகிஸ்தான் பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மார்ச் 9 அன்று பாகிஸ்தான் அரசு எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக அரசு வாகனங்களுக்கான எரிபொருள் 50% குறைக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியமும் குறைக்கப்பட்டது. அதோடு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.