📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 03:34 PM

மேற்கு வங்கம் இடைத்தேர்தல் | மம்தா Con.

மேற்கு வங்கம் இடைத்தேர்தல் | மம்தா Con.

மேற்கு வங்கம் இடைத்தேர்தல் | மம்தா Con.-க்கு ஆதரவு.. ஆனால் திடீர் ட்விஸ்ட்!

செய்தியாளர் - M. மீரா

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் பெரும் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவியதால் கட்சி உடைந்தது. அதுமட்டுமில்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவரானார். இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முக்கிய அரசியல் களமான நந்திகிராமில் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நந்திகிராமில் அடுத்தடுத்து நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மம்தா பானர்ஜி அணியின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே திடீரென தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி தனது ஆதரவை அறிவித்தார். சில மணி நேரங்களிலேயே மிலன் பிரதான் 2007ஆம் ஆண்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா அணியின் திரிணாமூல் காங்கிரசின் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தார். வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதற்கான காரணத்தை அவர் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பு அவர் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்திருந்தார்.

அவர், வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி, நந்திகிராமில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என அறிவித்தார். காங்கிரஸ் தங்களின் சகோதரக் கட்சி என்றும், எதிர்காலத்தில் I-N-D-I-A கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மம்தா தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு அடுத்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்தும் போராட்டத்துடன் தொடர்புடைய பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. நிலுவையில் இருந்த வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கைது, தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு தானாகவே தகுதி நீக்கம் செய்யாது என்றாலும், அவரது பிரசாரத்தை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த கைது தொடர்பாக காங்கிரஸ் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், இந்த கைது தொடர்பான நேரத்தை மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, மம்தா தனது வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என தெரிந்ததால், வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

2007ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போராட்டங்களால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நந்திகிராம், 2021ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி–சுவேந்து அதிகாரி நேரடி மோதலாலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல், மேற்கு வங்க அரசியலில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான உள்கட்சி மோதலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மம்தா அணிக்கு மம்தா ஆல் இந்தியா திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரையும் கால்பந்து வீரர் சின்னத்தையும் வழங்கியுள்ளது. அதிருப்தி அணிக்கு டெமாக்ரடிக் திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரும் envelope சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.