மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்; 2 ஆயிரம் பேருக்கு பாஸ்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன; பக்தர்களுக்கு 2,000 பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், செப்.,18ம் தேதி வரை கோவில் பகுதியில் ரோட்டோர கடைகள் வைக்கத் தடை வைக்கப்பட்டு உள்ளது; நாளை நடைபெறும் மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்; அனைத்து துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தை காண 2 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. பாஸ் விவகாரத்தில் நான் எங்கும் தலையிடவில்லை. இன்று பிற்பகல் 2 மணி முதல் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் தீவிரமாகும்; பக்தர்கள் வரும் வழிகளில் ஒத்திகை பார்க்கப்படுகிறது. அறங்காவலர்கள் செயல்படுவதை தடுக்கவில்லை. அறங்காவலர்களின் தேவைகளை பேசி நிவர்த்தி செய்வோம்.
பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை. பொதுப்பணித்துறையினரின் ஆய்வின் அடிப்படையில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மக்கள் சிரமம் இன்றி வந்து செல்லவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே இலக்கு; பக்தர்களின் தேவையை உணர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.