📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 17, 2026 11:30 AM

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கிற்கு செல்ல விடாமல் சிம்மம் சத்தியபாமாவை தடுத்த காவல்துறை

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று நேற்று சிம்மம் சத்தியபாமா தலைமையிலான தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published : September 17, 2026 at 7:48 AM IST

மதுரை: தமிழ் ஓதுவார்கள் மற்றும் தமிழ் மந்திரம் குறித்து போராட்டம் நடத்திய சிம்மம் சத்தியபாமா மற்றும் அவரது சீடர்களை இன்று நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு திருவிழா இன்று (செப்டம்பர் 17) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அனுமதி பெற்றிருந்த தெய்வத்தமிழ் பேரவையின் தலைமை செயற்குழு உறுப்பினரும், சேலம் தமிழ் வேத ஆகம பாடசாலையின் நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா, விடுதியிலிருந்து கோயிலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்து விடுதியிலேயே சிறை வைத்தனர்.

இதுகுறித்து சிம்மம் சத்தியபாமாவை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது, “மதுரை மீனாட்சி குடமுழுக்கு விழாவிற்கு செல்வதற்காக இந்து சமய அறநிலையத்துறையில் சிறப்பு அனுமதி கடிதம் பெற்றிருந்தேன். இந்நிலையில் இன்று காலை நான் தங்கி இருக்கும் விடுதியிலிருந்தே என்னை வெளியே செல்லவிடாமல் காவல்துறை தடுத்துள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும். தமிழ் ஓதுவார்கள் சரிசமமாக அமர்த்தப்பட வேண்டும். வேள்விச்சாலை, கோபுரம் மற்றும் கருவறைகளில் தமிழர்களே தமிழ் மந்திரங்களில் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்நிலையில் நேற்று மதுரையிலும் இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கோயிலுக்கு சென்று தானே பார்க்க முடியும். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஜனநாயக அடிப்படையற்ற செயலாகும்” என வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, இந்த குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும், தமிழ் ஓதுவார்களை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி சிம்மம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்மம் சத்தியபாமா, “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ் ஓதுவார்களை கோயில் கருவறைக்குள் அனுமதிக்கவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அவர் சார்ந்த சமூக அர்ச்சகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் தேர்வான அர்ச்சகர்களையும் இந்த குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, தமிழ் ஓதுவார்களை ஓரம்கட்டிவிட்டு சமஸ்கிருத ஓதுவார்களை மட்டும் குடமுழுக்கு விழாவில் அனுமதிக்கின்றனர்.

எனவே, சமஸ்கிருத ஓதுவார்களுக்கு இணையாக தமிழ் ஓதுவார்களையும் இந்த விழாவில் அனுமதிக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சாதிய தீண்டாமை நடைபெறுகிறது. தமிழ் ஓதுவார்களுக்கான அனுமதி குறித்து இணை ஆணையர் எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் ஓதுவார்களை புறக்கணிப்பதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழ் ஓதுவார்கள் குறித்த சில கோரிக்கைகளை சிம்மம் சத்தியபாமா அமைச்சரிடம் முன்வைத்தார். இதுதொடர்பாக விரைவில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். இதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.