📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion June 04, 2026 04:30 PM

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மீஞ்சூர், காஞ்சீபுரம், திருவொற்றியூர் ஆகிய 3 இடங்களில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் ஒரே தேதியில் ஒரே நேரத்தில் திருவிழாக்கள் ஆகம விதி களின்படி நடைபெற்று வருகிறது.

அதன்படி வைகாசி மாதம் 28-ந் தேதி இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-வது நாள் கருட சேவையில் வரதராஜ பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் காலை, இரவு நேரங்களில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் வீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக உற்சவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நான்கு மாடவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூந்தமல்லியில் மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. 7-ம் நாள் விழாவை யொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. பிரகாசம், அறநிலையத்துறை இணை கமிஷனர் திருவள்ளூர் அனிதா, கோவில் செயல் அலுவலர் சிந்துமதி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிறைவாக கோயில் நிலையை வந்தடைந்தது.

ஒவ்வொரு நாளும் இரவில் சிம்ம வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.