📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 05, 2026 09:02 AM

"மீண்டும் ஷமியை எடுப்பதில் அர்த்தமே இல்லை".. 2027 உலகக்கோப்பை குறித்து தினேஷ் கார்த்திக் பேச்சு

"மீண்டும் ஷமியை எடுப்பதில் அர்த்தமே இல்லை".. 2027 உலகக்கோப்பை குறித்து தினேஷ் கார்த்திக் பேச்சு

"மீண்டும் ஷமியை எடுப்பதில் அர்த்தமே இல்லை".. 2027 உலகக்கோப்பை குறித்து தினேஷ் கார்த்திக் பேச்சு

மும்பை: 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமியை மீண்டும் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாகத் கூறி இருக்கிறார். இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 351 ரன்களை அடித்தும் பந்துவீச்சில் சொதப்பி இந்திய அணி தோல்வியடைந்ததால், ஷமியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக், ஷமியின் காலம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். "இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லை. அணி நிர்வாகம் ஷமியைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. ஷமி உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி வந்தாலும் கூட, மீண்டும் அவரைத் தேர்வு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் போன்ற பல திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கு இவர்களே போதுமானவர்கள். எனவே ஷமியின் பக்கம் இனி தேர்வுக்குழு செல்ல வாய்ப்பில்லை. புதிய பந்துவீச்சாளர்களையே நாம் ஆதரிக்க வேண்டும்" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. ரசிகர்கள் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில் ஷமிக்கு மாற்றாக அவரது பெயரையும் கூறி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

அதேபோல் 2027 உலகக்கோப்பைக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால், அது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.