மின் கட்டண உயர்வு புகார்; 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு
மின் கட்டண உயர்வு புகார்; 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு - மின்சார வாரியம் தகவல்
மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அருகிலுள்ள மின்வாரிய அலுவலகங்களை அணுகியோ அல்லது மின்னகம் (94987 94987) சேவை மையத்தை தொடர்புகொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Published : August 1, 2026 at 8:46 PM IST
சென்னை: சிறப்பு மீட்டர் ரீடிங் மறு ஆய்வு பணியில் இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள சூழலில், 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதத்தை ஒப்பிடுகையில், ஜூலை மாத மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது புகார்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இச்சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மூத்த அதிகாரிகள் மூலம் மறுஆய்வு செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான அருண்ராய் உத்தரவிட்டார்.
மேலும், புகார் வந்த 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த ஆய்வை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மின் கட்டணம் தொடர்பாக சில தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை தொடர்ந்து, மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் சிறப்பு மின்னளவி (மீட்டர்) மறுஆய்வுப் பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில் மட்டும், அதாவது 0.65 சதவீதத்தில் மட்டுமே மின்னளவி பதிவு மற்றும் மின் கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வேறுபாடு கண்டறியப்பட்ட மின் இணைப்புகளில், கள ஆய்வின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு இணங்க மின் கட்டணங்கள் உரிய முறையில் திருத்தி அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த சிறப்பு மின் கட்டண கணக்கீட்டில் மறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் மின் கட்டண கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் உறுதி செய்வதோடு, மின் நுகர்வோரின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எனவே, மின்நுகர்வோர் யாரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அருகிலுள்ள மின்வாரிய அலுவலகங்களை அணுகியோ அல்லது மின்னகம் (94987 - 94987) சேவை மையத்தை தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார் பதிவு செய்தோ உரிய விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துக் கொள்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.