📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 03:32 PM

மின் கட்டண உயர்வு விவகாரம்: வாட்ஸ்ஆப் தகவலை நம்பி மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார்

மின் கட்டண உயர்வு விவகாரம்: வாட்ஸ்ஆப் தகவலை நம்பி மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார்

மின் கட்டண உயர்வு விவகாரம்: வாட்ஸ்ஆப் தகவலை நம்பி மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார் - அமைச்சர் நிர்மல்குமார் பதில்

இந்த மாதத்தில் 3.70 மின் இணைப்புகளுக்கு அதிக கட்டணம் வந்திருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Published : July 31, 2026 at 1:36 PM IST

சென்னை: மின் கட்டண உயர்வு விவகாரத்தில் வாட்ஸ்அப்-பில் வரும் தவறான தகவலை நம்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தில் பலருக்கு மின் கட்டணம் அதிகளவில் வந்ததாக புகார்கள் எழுப்பப்பட்டன. தவெக அரசு இலவச மின்சாரத்தை அறிவித்து விட்டு, அமைதியாக மின் கட்டணத்தை உயர்த்தியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

இதற்கிடையே, புதிய மின் மீட்டர் கணக்கீட்டில் ஊழியர்களின் குளறுபடி மற்றும் பில்லிங் குறைபாடு காரணமாகவே அதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர், அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்த சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில், இந்த மாதத்தில் 3.70 மின் இணைப்புகளுக்கு அதிக கட்டணம் வந்திருப்பதாக மின்சார வாரியம் பகிரங்கமாக தெரிவித்தது. மேலும், அதிக கட்டணம் வந்த அனைத்து மின் இணைப்புகளையும் மறுஆய்வு செய்து வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கூடுதல் மின் கட்டணம் குறித்து புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் த.வெ.க அரசை விமர்சித்தார்.

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… https://t.co/6FubNiIFPa

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.

3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது” என விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

மேலும், “இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், வாட்ஸ்ஆப்-பில் வரும் தவறான தகவலை நம்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வாட்ஸ்அப்-பில் வந்த தவறான தகவலை நம்பி மக்களை குழப்பும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் ரொட்டீன் செக்கப் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டும் இதே போன்று இரண்டு முதல் மூன்று மடங்கு, சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மின் கட்டணம் உயர்வாக வந்துள்ளது.

இந்த ஆண்டு 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே 2 முதல் 3 மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. கடந்தாண்டு ஒப்பிடுகையில் இது குறைவு. இதுகுறித்து புகார்கள் எதுவும் வரவில்லை.

மின் கட்டணத்தில் மாறுபாடுகள் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.