📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 10, 2026 05:00 AM

மிஸ்டர் கழுகு: அண்ணாமலை கட்சியில் ரஜினி மருமகன்!

மிஸ்டர் கழுகு: அண்ணாமலை கட்சியில் ரஜினி மருமகன்!

மிஸ்டர் கழுகு: அண்ணாமலை கட்சியில் ரஜினி மருமகன்!

மிஸ்டர் கழுகு தொடர்ச்சி...

மீண்டும் அலுவலகத்துக்கு வந்த கழுகார், ஆர்வத்துடன் அண்ணாமலையின் புதுக்கட்சி தொடர்பான செய்திகளுக்குள் நுழைந்தார்.

“அண்ணாமலையின் புதுக்கட்சி பா.ஜ.க-வுக்குள் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது. கரு.நாகராஜன், காந்த் கருணேஷ் உள்ளிட்டவர்கள் இப்போதே கட்சியிலிருந்து விலகிவிட்டனர். மேலும் பல முக்கியப்புள்ளிகள் முழுக்குப்போடக் காத்திருக்கிறார்கள். அதைதி தடுப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அந்தக் கூட்டத்தில், ‘தேர்தல் தோல்விக்கு, தமிழகத் தலைமை காரணமல்ல...’ என்று மூத்தவர்கள் சிலர் சொல்ல, மாவட்டத் தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லையாம்.”

“ஒரு மாவட்டத் தலைவர் மட்டும் எழுந்து, நயினாருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். ‘மாநிலத் தலைமையின் அணுகுமுறை சரியில்லாததால்தான், கட்சியினர் பலரும் அண்ணாமலை பக்கம் செல்கின்றனர்...’ என்று அவர் பொரிந்து தள்ள, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார்களாம் மற்ற மாவட்டப்புள்ளிகள்.”

“எதிர்ப்பு இல்லையென்றால் ஆமோதிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்... நீர் சொல்வதைப் பார்த்தால், கமலாலயத்தில் பல மாற்றங்கள் வரும்போலயே...”

“ம்ம்... துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பொறுப்புகளில் 50 சதவிகிதம் இளைஞர்களை நியமிப்பது, செய்தித் தொடர்பாளர்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது, 67 கட்சி மாவட்டங்களை 117-ஆக உயர்த்துவது குறித்தெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ‘சத்தியமாகச் செய்கிறேன்... மேலிடத்தில் பேசுகிறேன்’ என்றிருக்கிறார் நயினார். ‘ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் பொறுமை காப்போம். அதன் பிறகும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றால், அண்ணாமலை பக்கம் தாவிவிட வேண்டியதுதான்...’ என்று கெடு விதித்திருக்கிறார்கள் கட்சியிலிருக்கும் இளைய நிர்வாகிகள்.”

“அது சரி... அண்ணாமலைக்கு ரஜினிகாந்த்தின் ஆதரவு இருக்கிறதா... இல்லையா... பொதுவெளியில் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாரே ரஜினி!”

“இப்போதைக்கு, நேரடியாக ஆதரவு தெரிவிக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், சில சமிக்்ஞைகளை நிச்சயம் வெளிப்படுத்துவார். அதில் ஒரு சமிக்ஞையாக, அண்ணாமலையின் புதுக்கட்சியில் இணைய முடிவெடுத்திருக்கிறாராம் நடிகர் ரஜினியின் மருமகன் விசாகன். அதாவது, ரஜினியின் இரண்டாவது மகளின் கணவர். சமீபத்தில் அண்ணாமலையைச் சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார் விசாகன். அண்ணாமலையின் கட்சியில் விசாகனை பொதுச்செயலாளராக்குவது குறித்தும் அப்போது பேசப்பட்டிருக்கிறது.’’

“பலே... சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியிருக்கிறாரே அன்புமணி... அவர் கணக்கு என்ன?”

“எல்லாம் த.வெ.க-வை நெருங்கும் கணக்குதான். அ.தி.மு.க பலவீனப்பட்டிருப்பதோடு, பா.ஜ.க-வி லிருந்து அண்ணாமலையும் விலகிவிட்டதால், ‘இனி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேறாது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அன்புமணி. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி முதல்வர் விஜய்யைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அவர், கொஞ்சம் கொஞ்சமாக த.வெ.க கூட்டணிக்குச் செல்லும் முடிவுக்கு வந்துவிட்டாராம். விரைவில், அன்புமணியும் த.வெ.க ஆதரவுப் புராணம் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...”

“எல்லோரும் த.வெ.க-வை நெருங்கினால் யார்தான் தி.மு.க-வுடன் இருப்பார்களோ... சரி, மாற்றுக் கட்சியினர் இணையும் விழாக்களை அறிவாலயமும் வேகப்படுத்தியிருக்கிறதே!” என்றோம். கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“ம்ம்... திருமா எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதும், அதைப் பொருட்படுத்தாமல் பனையூர் பாபுவை, கட்சியில் சேர்த்திருக்கிறது தி.மு.க. அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் அளிக்கப்படவிருக்கிறது. அடுத்ததாக ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோரை உள்ளே இழுக்க, தொடர் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. வி.சி.க மட்டுமல்ல... ம.தி.மு.க-வையும் குறிவைத்திருக்கிறது தி.மு.க.”

“கட்சியில் இணைய விரும்பியவர்களை, தொடக்கத்தில் தடுத்ததே ஸ்டாலின்தானே!”

“அது போன மாதம்... இது இந்த மாதம். ம.தி.மு.க-வில் பல்லாண்டுக்காலம் பயணித்த திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் தி.மு.க-வில் இணைய ஆவலாக இருந்தனர். ஆனால், ‘வைகோ கோபித்துக்கொள்வார்’ என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் இணைத்துக் கொள்ளாமல் தவிர்த்தார் ஸ்டாலின்.

தனிக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா, தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தபோதும், அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். சமீபகாலமாக, வைகோவும் அவர் மகன் துரை வைகோவும் த.வெ.க-வுக்கு ஆதரவாகப் பேசிவருவது ஸ்டாலினின் கோபத்தைக் கிளறிவிட்டுவிட்டது. ம.தி.மு.க-விலிருந்து வருபவர்களையும் இணைத்துக்கொள்ளத் தயாராகிவிட்டார். அதன்படி, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், புலவர் செவந்தியப்பன், கழகக் குமார் உள்ளிட்ட முன்னாள் ம.தி.மு.க நிர்வாகிகள் விரைவில் தி.மு.க-வில் இணையவிருக்கிறார்கள்...” என்று கூறிவிட்டு விண்ணை நோக்கிப் பறந்தார் கழுகார்.