📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 02, 2026 02:33 AM

மிஸ்டர் கழுகு: விஜய்க்கு பதிலடி... உதயநிதி பிளான்!

மிஸ்டர் கழுகு: விஜய்க்கு பதிலடி... உதயநிதி பிளான்!

மிஸ்டர் கழுகு: விஜய்க்கு பதிலடி... உதயநிதி பிளான்!

காணொளி வாயிலாக நடந்த அந்தக் கூட்டத்தில், ‘வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் த.வெ.க-வின் பிம்பத்தை அடித்து நொறுக்க வேண்டும்’ என்று கறாராகக் கூறினாராம்.

“கர்நாடகாவுக்குச் செல்ல விமான டிக்கெட் எடுக்கச் சென்றிருந்தேன். அதனால் தாமதமாகிவிட்டது” என்றபடி அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, தித்திப்பான மைசூர்பாகு துண்டுகளைத் தட்டில்வைத்து நீட்டினோம். ருசித்துவிட்டு செய்திகளைச் சொல்லத் தொடங்கினார் கழுகார்.

“எதிர்க்கட்சிகள் அனைத்தும், ‘மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக முதல்வர் செல்லக் கூடாது’ என ஒருமித்த குரலாக ஒலிக்கின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தோழமைக் கட்சிகளுமே வலியுறுத்துகின்றன. ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கர்நாடகாவுக்குச் செல்வதில் உறுதியாக இருக்கிறதாம் முதல்வர் விஜய் தரப்பு. இதற்கிடையே, முதல்வர் கர்நாடகாவுக்குக் கிளம்புவதற்கு முன்பாக தங்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தயாராகிறதாம் தி.மு.க. அதேபோல, த.வெ.க அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புவிட, தயாராகிறார்களாம்.”

“அது சரி... இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வேறொரு கூட்டத்தைக் கூட்டுகிறதாமே த.வெ.க?”

“ஆமாம். கர்நாடகாவுக்குச் செல்லும் தமிழக முதல்வருக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பளிக்க, அங்குள்ள ரசிகர்களைத் திரட்ட முடிவுசெய்யப்பட்டிருக்கிறதாம். ‘எம்.ஜி.ஆர் பாணியில் கர்நாடகாவுக்குச் செல்கிறார் விஜய்’ என்று கருத்துருவாக்கம் செய்து, கர்நாடகாவிலும் விஜய்க்கு மாஸ் இருக்கிறது என்பதுபோல நரேட்டிவ் செட் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், ‘இந்த கர்நாடகா பயணத்தால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஷோ காட்டுவதோடு முடிந்துவிடும்’ என்று நொந்து கொள்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.”

“சரிதான்... தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாராமே உதயநிதி ஸ்டாலின்?”

“பலே... செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து மேலும் இரண்டு மாஜிக்களுக்குச் சிக்கல் வரப்போகிறதாமே?”

“உண்மைதான். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய முடிவெடுத்திருக்கும் அரசாங்கம், சேகர் பாபுவுக்கும் சிவசங்கருக்கும் ‘ஸ்கெட்ச்’ போட்டிருக்கிறதாம். அவர்களுக்கு எதிரான ஃபைல்களும் புகார்களும் விசாரிக்கப்படுகின்றனவாம். இரண்டு மாஜிக்களையாவது சிறையில் தள்ளிவிட்டால், அதைவைத்தே தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவிட, திட்டமிட்டிருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.”

“தி.மு.க எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தில் ஏதோ பிரச்னையாமே?”

“யெஸ்... த.வெ.க-வில் இணைந்துவிட, ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத் துடியாய் துடிக்கிறாராம். பனையூருக்கு ஓலை அனுப்பியும் யாரும் மதிக்கவில்லை. நீண்ட கெஞ்சலுக்குப் பிறகு, ‘உங்கள் அப்பாவையும் அழைத்து வருவதாக இருந்தால் பரிசீலிக்கலாம்’ என்று சொல்லிவிட்டதாம் பனையூர் மேலிடம். தி.மு.க-விலிருந்து விலக வேண்டுமானால், தன் எம்.எல்.ஏ பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அவர் தயாராக இல்லை. இதனால், குடும்பத்துக்குள் பிரச்னை வெடித்திருக்கிறதாம்.”

“சரி, வேலுமணியையும் தங்கமணியையும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தக்கவைக்க நினைக்கிறாராமே... என்ன செய்தி?”

“எல்லாம் ஒரு அரசியல் கணக்குதான். ‘தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டு, ஈரோட்டில் வேலுமணி தலைமையிலும், சேலத்தில் தங்கமணி தலைமையிலும் கட்சி சார்பில் மரியாதை செய்யப்படும்’ என அறிவித்திருக்கிறார் எடப்பாடி. கட்சியைவிட்டு வெளியேறும் முடிவை வேலுமணி எடுக்க வாய்ப்பிருப்பதால், அவரைத் தக்கவைக்கும் எண்ணத்திலேயே எடப்பாடி இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறாராம். ஒருவேளை வேலுமணி வெளியேறினாலும்கூட, ‘கடைசி நிமிடம் வரையில் அரவணைத்தேன்... அவர்களாகப் போய்விட்டார்கள்’ என்று பிரச்னையை அவர்கள் பக்கம் திருப்பிவிடலாம் என்ற எண்ணமும் இதற்குள் ஒளிந்திருக்கிறதாம்.”

“ம்ம்... பா.ம.க தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வாகியிருக்கிறாரே?”

“மீண்டும் தலைவராகியிருக்கும் சூட்டோடு சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறாராம். மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காததால், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விடலாம் என முடிவெடுத்து விட்டதாம் பா.ம.க. காவிரி விவகாரத்தைக் காரணமாகவைத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை நகர்த்தவிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான், ‘மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் பேசினால், பா.ஜ.க கூட்டணியைவிட்டு வெளியேறத் தயார்’ எனவும் பேசியிருக்கிறார் அன்புமணி” என்ற கழுகார், அடுத்த செய்திகளுக்குள் நுழைந்தார்.

“முந்தைய ஆட்சியில் ‘தண்ணீர்’ துறையில் கோலோச்சிய ‘திலக’ அதிகாரியின் டீமை டம்மி பதவிகளுக்குத் தூக்கியடித்துவிட்டது புதிய அரசு. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத `திலக’ அதிகாரி, ‘என் ஆட்களுக்காவது முக்கியப் பொறுப்புகளைப் போட்டுக் கொடுங்கள்’ என `பேரறிஞர்’ பெயர் கொண்ட முதல்வரின் தனிச்செயலரை நாடியிருக்கிறாராம். ஆனால், ‘தண்ணீர்’ துறையின் தற்போதைய உச்ச அதிகாரியோ, ‘திலக அதிகாரியின் டீமைச் சேர்ந்த எவருக்கும் முக்கியப் பணியிடம் கிடையாது’ என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இவர்களின் பஞ்சாயத்து கோட்டையில் பரபரக்கிறது.”

“தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் சென்னை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார் அல்லவா... அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தி.மு.க ஸ்கூல் மாஜிக்கும், அவரின் குடும்பப் புள்ளிக்கும் 200 கோடி அளவில் பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாக ‘க்ளூ’ கிடைத்திருக்கிறதாம். அதைத் தொடர்ந்து, விசாரணை வளையத்துக்குள் அந்த மாஜியும், குடும்பப் புள்ளியும் வரலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார், ‘இன்னும் மூன்று செய்திகள்’ என்று சைகை காட்டினார்.

“உதயநிதியின் ஆடிட்டராக இருந்த ‘முருகக் கடவுள்’ புள்ளி, தற்போது த.வெ.க முகாமில் ஐக்கியமாகிவிட்டார். ‘நிலக்கரி கொள்முதலில் கவனம் செலுத்தினால் ஸ்வீட் பாக்ஸுகளை அள்ளிவிடலாம்’ என த.வெ.க தலைமைப் புள்ளிகளிடம் ஆலோசனை சொல்லிவருகிறாராம் அந்த ஆடிட்டர்.”

“சரி, இரண்டாவது தகவல்?”

“சி.பி.ஐ-யில் பணியாற்றிவிட்டு தமிழகத்துக்குத் திரும்பியிருக்கும் ஏ.டி.ஜி.பி வித்யா குல்கர்னியை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்க வெள்ளை மாளிகை முடிவு செய்திருக்கிறதாம். அரசியல் சாயம் இல்லாதவர் என்பதால், முதல்வர் அலுவலகமும் அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவே அதிக வாய்ப்பிருக்கிறது.”

‘‘மூன்றாவது தகவல்?’’

‘‘உதயநிதியைக் கட்சியின் முதன்மைப் பொறுப்புக்குக் கொண்டுவர, குடும்பத்தினரால் வலுவான திட்டங்கள் தீட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரப்போகிறதாம். இதனால், ‘உதயநிதியை இனி கட்சியினர் `இளைய கலைஞர்’ என்றே அழைக்க வேண்டும்’ என, தலைமையிலிருந்து உத்தரவுகள் போயிருக்கின்றனவாம்... கூடவே, கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து, அனைவரும் உதயநிதிக்கே `ரிப்போர்ட்’ செய்வதுபோலவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளைக் கூடுதலாக்குவதோடு, தற்போது துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழிக்கென, `முதன்மை துணைப் பொதுச்செயலாளர்’ என்ற பதவியையும் உருவாக்கப்போகிறார்களாம்.’’

‘‘அடேங்கப்பா...’’

‘‘லண்டனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் இருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் சுணங்கினாராம். தொடர்ந்து அவருக்கு உடல் அசதி இருப்பதால், அவர் இடத்தில் உதயநிதியைக் கொண்டுவர குடும்பத்திலேயே பலரும் விருப்பப்பட்டுத்தான், சமீபத்திய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக்கூட அவரைவிட்டே நடத்தவைத்தனராம். தொடர்ச்சியாகக் கட்சியில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றனவாம்...’’ என்று சொல்லிவிட்டு, சிறகுகளை விரித்தார் கழுகார்.