மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வென்றது எப்படி? ‘தமிழ் மணம்’ நிகழ்ச்சியில் பழ.கருப்பையா பேச்சு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ‘தமிழ் மணம்’ என்ற தலைப்பில் தமிழ் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி அரங்கில் நடந்தது.
இதில் ‘வில்லிபாரதம்’ என்ற தலைப்பில் பழ.கருப்பையா பேசியதாவது:
உலகம் முழுவதும் எத்தனையோ நுால்கள் எழுதப்பட்டிருந்தாலும், அவை எதுவும் மகாபாரதம் போல் காலத்தை தாண்டி நிற்கவில்லை.
இந்தியாவில், 3000 ஆண்டுகளாக மகாபாரதம் மக்களை சீர்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதற்கு இணையான படைப்பு, உலக மொழிகளில் இதுவரை எழுதப்படவில்லை. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் எழுதப்பட்டு இருந்தாலும், மகாபாரதம், ராமாயணத்துக்கு ஈடில்லை.
தருமனை போல் ஒரு பாத்திரத்தை படைக்க வியாசரால் மட்டும்தான் முடியும். தர்மனின் குணங்கள் அனைத்தும் வியாசருக்கு உண்டு. அதனால்தான் தர்மனின் பாத்திரப்படைப்பு அவ்வளவு உன்னதமாக இருக்கிறது.
துரியோதணனின் பாத்திரமும் சிறப்பானது. கர்ணனிடம் அவன் காட்டும், அன்பும், நட்பும், எந்த பாத்திரத்துக்கும் இல்லை. தர்மத்தை மீறாதவன் தர்மன்.
தானத்தையும், நன்றி உணர்வையும் மறக்காதவன் கர்ணன். மகாபாரதமே தர்மன், கர்ணன் இரண்டு பாத்திரத்துக்காகதான் படைக்கப்பட்டன.
கிருஷ்ணன் சூதுக்காரன். அவன் கர்ணனிடம், ‘‘நீ தேரோட்டியின் மகனல்ல, சூரியனின் புத்திரன். நீ குந்தியின் மூத்தமகன். பாண்டவர்களுக்கு ஆதரவாக போரிட்டால் நாடு கிடைக்கும். மூத்தவர் என்ற முறையில் நீ அரசன் ஆவாய். ஐந்து தம்பிகளுடன் அரசாளலாம்’’ என்கிறான்.
அத்துடன்,‘‘ ஐந்து பேருக்கு சொந்தமான பேரழகி பாஞ்சாலி உனக்கும் சொந்தமாவாள். அதனால் பாண்டவருடன் சேர்ந்து விடு’’ என்கிறான்.
அப்போது கர்ணன், ‘‘நீங்கள் கூறியது எதுவும், துரியாதணனின் நட்புக்கு ஈடாகாது. நான் ஒரு போதும் நன்றி மறக்கமாட்டேன்’’ என்று மறுத்து விடுகிறான்.
மகாபாரத போரில் ‘தர்மமே வெல்லும்’ என்கிறான் கிருஷ்ணன். கர்ணனிடம் நாகாஸ்த்திரம் உள்ளது. துரோணரிடம் பிரசாஸ்த்திரம் இருக்கிறது.
இந்த இரண்டும் பயன்படுத்தப்பட்டால் பாண்டவர் படையில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். அப்புறம் எப்படி பாண்டவர்கள் வெல்ல முடியும்; கவுரவர்கள்தானே வெல்வார்கள் என கேட்கலாம்.
இங்குதான் கிருஷ்ணனின் சூதும், சூழ்ச்சியும் இருக்கிறது. குந்தியை கர்ணனிடம் அனுப்பி, நாகாஸ்த்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என, வரம் வாங்கி வர வைக்கிறான்.
துரோணர் பிரம்மாஸ்த்திரத்தை பயன்படுத்தாமல் தடுக்க, போரில் துரோணரின் மகன் அஸ்வத்தமன் இறந்து விட்டதாக பொய் சொல்ல சொல்கிறார். தர்மன் மறுக்கிறான்.
இதை நாங்கள் யார் சொன்னாலும் துரோணர் நம்பமாட்டார். தர்மன் சொன்னால்தான் நம்புவார். மகன் இறந்த சோகத்தில் துரோணர் போர் செய்யமாட்டார்.
பிரம்மாஸ்த்திரம் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். மகாபாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற இந்த இரண்டு வழிகள் மட்டும்தான் உள்ளது என்கிறான் கிருஷ்ணன்.
போரின் அஸ்வத்தமன் என்ற யானை இறந்ததை, தர்மன் அஸ்வத்தமன் இறந்ததாக சத்தமாக சொல்கிறான். தர்மன் சொன்னதால், துரோணர் நம்பி போரில் இருந்து வெளியேறுகிறார்.
தேரை நிலத்தில் அழுத்தி கர்ணனின் நாகாஸ்த்திரத்தில் இருந்த அர்ஜூனனை காப்பாற்றுகிறார். இந்த இரண்டு அஸ்த்திரங்களில் இருந்தும் பாண்டவர்கள் தப்பித்து கொண்டதால், மகாபாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
இல்லை என்றால் போரில் கவுரவர்கள்தான் வென்று இருப்பார்கள். அறத்தையும், தர்மத்தையும் மீறாமல் மாபெரும் மகாபாரத இதிகாசத்தை படைத்து மக்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார் வியாசர்.
இவ்வாறு, அவர் பேசினார்.