📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil May 27, 2026 08:32 PM

மலேசியா

மலேசியா

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான டாக்சி கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் மலேசியர்கள் உட்பட பல பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலேசிய ஊழியரான எஸ். ரீதா. இருபது ஆண்டுகளாக எல்லையைக் கடந்து பயணம் செய்து வருகிறார்.

ஆனால் அண்மைய டாக்சி கட்டண உயர்வு அவருக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

“என்னிடம் கட்டணத்தை ஓட்டுநர் தெரிவித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்குப் புதிய திட்டம் பற்றி தெரியாததால் அவர் பொய் சொல்கிறார் அல்லது அதிகக் கட்டணம் வசூலிக்க முயற்சி செய்கிறார் என்று நினைத்தேன்,” என்று எஸ். ரீதா கூறினார்.

“கட்டணம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியில்லை. வேலைக்குப் போயாக வேண்டும்,” என்று மே 15ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரலில் இருந்தபோது அவர் தெரிவித்தார்.

“முன்பு ஒரு வழிப் பயணத்துக்கான கட்டணம் 120 ரிங்கிட்டாக இருந்தது. நான், இரண்டு பயணிகளுடன் அதனை பகிர்ந்துகொள்வேன். ஒவ்வொருவரும் 40 ரிங்கிட் செலுத்துவோம். இப்பொழுது நபருக்கு கட்டணம் 80 ரிங்கிட் வரை இரு மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார் நிர்வாகப் பணியில் உள்ள எஸ். ரீதா.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியப் போக்குவரத்து அமைச்சுகள் மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய டாக்சி திட்டத்தை அறிவித்தன. இந்தத் திருத்தப்பட்ட கொள்கை மே 4ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி, சிங்கப்பூரிலோ அல்லது ஜோகூரிலோ பயணிகள் விரும்பிய இடத்தில் இறங்கிக்கொள்ள முடியும்.

ஆனால் லார்க்கின் சென்ட்ரலில் உள்ள டாக்சி நிலையத்தில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது பலருக்கு திருத்தப்பட்ட கட்டணங்கள் பற்றி தெரியவில்லை. டாக்சி ஓட்டுநர்கள் இது பற்றி பயணிகளுக்கு தெரிவிக்கின்றனர். பல தரப்பட்ட வாகனங்களுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம், டாக்சி ஓட்டுநர் ஒருவர் புதிய கட்டணம் பற்றி தெரிவித்ததும் அமெரிக்க வர்த்தகரான கிறிஸ்டியன் மோலா, 52, தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தார்.

“புதிய கொள்கை பற்றி ஓட்டுநர் விளக்கியதும் புரிந்துகொண்டேன். புதிய கட்டணத்தை என்னால் செலுத்த முடிந்தாலும் அது அதிகம். உள்ளூர் மக்களுக்கு கட்டண உயர்வு ஒரு சுமையாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூரரான சிகை அலங்கார நிபுணரான ஜோயன் சின் கூன் மெய், 48, விரும்பிய இடங்களில் இறக்கிவிடப்படுவதற்காக கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல என்று குறிப்பிட்டார்.

புதிய திட்டத்தின்படி உரிமம் பெற்ற டாக்சி ஓட்டுநர்கள், பயணிகளை சிங்கப்பூரில் எந்த இடத்திலும் ஜோகூரில் ஜோகூர் பாரு, ஃபாரஸ்ட் சிட்டி, சினாய் உள்ளிட்ட இடங்களில் இறக்கிவிட முடியும்.

லார்க்கின் சென்ட்ரலில் இருந்து புறப்படும் பயணத்திற்கு நான்கு இருக்கை டாக்சிகளுக்கு 240 ரிங்கிட், ஆறு இருக்கை டாக்சிகளுக்கு 360 ரிங்கிட், பிரிமியம் ஆறு இருக்கை டாக்சிகளுக்கு 540 ரிங்கிட் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.