மறுபடியும் முதல்ல இருந்தா?
மறுபடியும் முதல்ல இருந்தா? – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கை!
"விவசாய நிலக் கூட்டத்தில் கொந்தளித்த காஞ்சிபுரம் விவசாயிகள், அனுபவமில்லாத கூட்டுறவு அதிகாரிகளால் வேதனை அடைவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்."
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் 'விவசாயிகள் நலன் காக்கும் நாள்' கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், வேளாண் அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனு அளித்து முறையிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை உட்படப் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் போது, விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய விரைவு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வேளாண் இடுபொருட்களும், இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், கூட்டத்தில் உத்திரமேரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய உரிய பயிர் கடன் தள்ளுபடி சலுகைகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதற்கு முக்கியக் காரணமாக, அப்பகுதிகளில் அனுபவமில்லாத கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பதே காரணம் என விவசாயிகள் சாடினர். அந்த அதிகாரிகளுக்குப் பயிர்களை சரியாகக் கணக்கீடு செய்யத் தெரியாததால், களத்தில் சரியான முறையில் பயிர் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், இதனால் தகுதியான பல விவசாயிகள் கடன் தள்ளுபடி பெற முடியாமல் போயுள்ளதாகவும் அடுக்கடுக்கான புகார்களை ஆட்சியர் முன் வைத்தனர்.
கூட்டுறவு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உத்திரமேரூர் பகுதி விவசாயிகள், தங்களுக்கு உடனடியாக மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அனுபவம் குறைந்த பணியாளர்களை நீக்கிவிட்டு, அனுபவம் வாய்ந்த திறமையான பணியாளர்களைக் கொண்டு மீண்டும் சரியாகப் பயிர் கணக்கீடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்து, உரிய நியாயம் வழங்கிட மன்றாடினர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி