மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி
மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி - பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்
புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை பாராட்டி குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
Published : August 9, 2026 at 5:35 PM IST
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற காவலர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான சேவையை பாராட்டி குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 09) கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி காவல் துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. வண்ணக்கொடி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை தொடங்கியது.
இந்த அணிவகுப்பின்போது, பெண் காவலர்கள் உட்பட 10 காவலர்கள் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அணிவகுப்பு நடைபெற்ற காவலர் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மயங்கிய காவலர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக புதுச்சேரி காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர்தான், காவலர்கள் மயங்கியதற்கான காரணங்கள் தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன், டிரோன் உள்ளிட்ட வான்வழி சாதனங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், அமைச்சர் அமித் ஷா புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதைத் தொடர்ந்து, தேசியக்கொடி பேரணியையும் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு, நேற்றைய தினம் (ஆகஸ்ட் 08) மத்திய அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.