📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 20, 2026 02:03 PM

மதுராந்தகத்தில் தீவிரப் பிரச்சாரம்: வாக்காளர்களை சந்திக்கும் வேட்பாளர்கள்

மதுராந்தகத்தில் தீவிரப் பிரச்சாரம்: வாக்காளர்களை சந்திக்கும் வேட்பாளர்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். அப்போது, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் இரவு நேர மின்வெட்டு குறித்து குற்றம்சாட்டினார்.

அவர் கூறுகையில், விலைவாசி உயர்வும், மின்சாரக் கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் வீடுகளுக்கு வெளியே தூங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, மதுராந்தகம் தொகுதியில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி, மூன்றாவது நாளாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளம்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, திட்டத்தில் முழுமையாக வேலை நாட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், 25 நாட்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்படுவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

மேலும், புகைப்படம் மற்றும் கண் விழித்திரை பதிவு உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு வேலை கிடைப்பதில்லை என்றும், இதனால் ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு சிக்கலால் ரேஷன் பொருட்களைக் கூட பெற முடியாத நிலை இருப்பதாக கூறினர்.

இதனிடையே, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந் தகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்று இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.