📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 03:31 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ் திருமுறைகளுக்கு முக்கியத்துவம் கோரி ஓதுவார்கள் போராட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ் திருமுறைகளுக்கு முக்கியத்துவம் கோரி ஓதுவார்கள் போராட்டம்!

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாளை காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மொத்தம் 14 கோபுரங்களுக்கும், தங்க மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் விமானங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கிய காலத்திலிருந்தே, கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ் ஓதுவார்கள் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

அப்போது, யாகசாலை பூஜைகளிலும், கலசங்களில் புனித நீர் நிரப்பப்படும் நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகள் ஓதப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக ஓதுவார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தங்களுக்கு உரிய முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, தமிழ் ஓதுவார்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பாகவும் நேற்று அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் யாகசாலை பூஜைகளுக்குச் சென்று, அங்கு தமிழ் திருமுறைகள் முறையாக ஓதப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யலாம் என ஓதுவார்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்ட தமிழ் ஓதுவார்கள் தற்போது கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், கோயில் வாசல் பகுதியில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "உள்ளே சென்று என்ன நிலைமை என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என அவர்கள் தெரிவித்ததாக ஓதுவார்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் தரப்பில் தங்களுக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஓதுவார்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், "விரைவில் உங்களை உள்ளே அனுப்ப நடவடிக்கை எடுக்கிறேன்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழுக்கும், தமிழ் திருமுறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, தமிழ் மரபுப்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது தொடர் கோரிக்கை எனத் தெரிவித்துள்ள தமிழ் ஓதுவார்கள், தற்போது மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.